×

75வது சுதந்திர தின கொண்டாட்டம் இலங்கை தனது தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்: அதிபர் ரணில் வலியுறுத்தல்

கொழும்பு: ‘இலங்கை தனது தவறுகளையும், தோல்விகளையும் சரி செய்து, பலத்தையும் ஆதாயங்களையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே வலியுறுத்தினார். வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கை நேற்று தனது 75வது சுதந்திர தின விழாவை கொண்டாடியது. இதையொட்டில் தலைநகர் கொழும்புவில் நடந்த நிகழ்ச்சியில், 21 துப்பாக்கி குண்டுகள் மரியாதையுடன் முப்படைகளின் ராணுவ அணிவகுப்பு நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் உள்ளிட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்றனர். சுதந்திர தின விழாவையொட்டி, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நாட்டு மக்களுக்கு விடுத்த செய்தியில், ‘‘காலனித்துவ ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்ற நாம் 75வது சுதந்திர ஆண்டு விழாவை மிகவும் நெருக்கடியான சவாலான நேரத்தில் கொண்டாடி வருகிறோம்.

இருப்பினும், ஒரு தேசமாக நமது பலம் மற்றும் ஆதாயங்களை மறுபரிசீலனை செய்வதற்கும், நமது தவறுகள் மற்றும் தோல்விகளை சரி செய்வதற்கும் இந்த விழா நமக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது’’ என்றார். முன்னதாக, கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சுதந்திர தினத்தை அரசு கொண்டாடுவது நாட்டு மக்களுக்கு பெரிய சுமை என குற்றம்சாட்டி எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக சுதந்திர தின விழாவை புறக்கணித்தன. இதே போல, இலங்கை தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்தில், தங்களுக்கு அரசியல் சுதந்திரம் மறுக்கப்படுவதாக தமிழர்கள் குற்றம்சாட்டி பல இடங்களிலும் கறுப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக, தலைநகர் கொழும்புவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.


Tags : 75th Independence Day Celebration ,Sri Lanka ,President ,Ranil , 75th Independence Day Celebration Sri Lanka must correct its mistakes: President Ranil insists
× RELATED போலி பாஸ்போர்ட் மூலம் சென்னையில்...