சென்னை-கோவைக்கு வந்தே பாரத் ரயில்: தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் பேட்டி

சென்னை: சென்னை - கோவை இடையே, வந்தே பாரத் ரயில் இயக்க ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்துள்ளோம் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார். தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என். சிங் தெரிவிக்கையில்: தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் புதிய ரயில் பாதைகளை அமைக்க ரூ.1,057.90 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இரட்டை ரயில் பாதை அமைக்க ரூ.1,321.28 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே கடந்த 2022-23ம் ஆண்டில் ரூ.8,100 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த 2021-22ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 45.6 சதவீதம் அதிகம்.

புதிய ரயில்பாதை அமைக்க ரூ.1,158 கோடி, அகலப்பாதை பணிக்கு ரூ.475.78 கோடி, இரட்டை பாதை பணிக்கு ரூ.1,564.88 கோடி, ரயில் பாதை புதுப்பித்தல், சிக்னல் தொழில்நுட்ப மேம்பாடு உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.1,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், தாம்பரம், ஆவடி, கோயம்புத்தூர், கும்பகோணம், திருநெல்வேலி உள்ளிட்ட 12 ரயில் நிலையங்களை மறுசீரமைப்பதற்கான சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கோட்டத்திலும் 15 ரயில் நிலையங்கள் என மொத்தம் 90 ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட உள்ளன.

வரும் ஜூன் மாதம் புதிய பாம்பன் ரயில் மேம்பாலம் திறக்கப்படும். சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரயில் இயக்க ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் இந்த சேவை தொடங்கப்படும். டிக்கெட் பணியாளர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள பயிற்சி அளித்து வருகிறோம். சென்னை புறநகரில் இந்த ஆண்டு இரண்டு 12 பெட்டிகள் கொண்ட ரயில் சேவை இயக்கப்படும். அடுத்த ஆண்டு 12 ரயில்கள் இயக்கப்படும் என்றார்.

Related Stories: