×

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் 8 ஏக்கரில் நவீன பூங்கா அமைக்கப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் சி.எம்.டி.ஏ. சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகளை அமைச்சர் பிகே.சேகர்பாபு இன்று ஆய்வு செய்து வியாபாரிகளிடம் குறைகள், கோரிக்கைகள் பற்றி கேட்டறிந்தார். அப்போது சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் அபூர்வா, செல்வி அன்சுல்மிஸ்ரா, கோயம்பேடு அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் சாந்தி, துணை ஆணையர் குமார், உதவி ஆணையர் ரமேஷ்பாபு உள்ளிட்டோர் இருந்தனர்.
ஆய்வுக்கு பிறகு நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது; கோயம்பேடு வணிக வளாகத்தில் கடந்த மாதம் 8ம் தேதி மலர்கள் அங்காடியில் ஆய்வு மேற்கொண்டு வியாபாரிகள் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினோம்.

இன்று காய்கறி சந்தையில் உள்ள 1985 கடைகள் அமைந்துள்ள பகுதியில் ஆய்வு மேற்கொண்டோம். குப்பை அகற்ற காலதாமதம் ஏற்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு நாளில் 2 முறை குப்பை அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர். திருவிழா காலங்களில் அதிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு குப்பை அகற்றவும் மற்ற நாட்களில் 2 முறை குப்பை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும். சர்வீஸ் சாலைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு காய்கறி சந்தையில் மொத்தம் உள்ள 3941 கடைகள் வெளிநாடுகளில் உள்ள மார்க்கெட்டு போல் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அடுத்தடுத்து பழங்கள் அங்காடி, உணவு தானிய அங்காடி, பேருந்து நிறுத்தம் போன்ற பகுதியில் ஆய்வு மேற்கொண்டு கோயம்பேடு காய்கறி மார்க்கெட் பகுதி பொதுமக்கள் எவ்வித சிரமமின்றி பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும். கோயம்பேடு சந்தையில் சேகரிக்கப்படும் காய்கறி கழிவுகளை சென்னை மாநகராட்சி சார்பில் சேத்துப்பட்டில் உள்ள பயோ கேஸ் ஆலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு வியாபாரிகள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

கோயம்பேடு காய்கறி சந்தை பகுதியில் கழிவறைகள் ஒருவார காலத்திற்குள் முழுமையாக சுத்தம் செய்யப்படும். போக்குவரத்து நெரிசல் பிரச்னை சரிசெய்யப்படும், விழாக் காலங்களில் கூடுதலாக காவலர்கள் நியமிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார். இதுகுறித்து கோயம்பேடு காய்கறி மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகளின் தலைவர் எஸ்.எஸ் முத்துகுமார் கூறும்போது, ‘’ கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் பகுதியில் மாடுகள் கூட்டமாக செல்வதால் காய்கறி வாங்கும் பெண்கள் அலறியடித்து ஓட்டம் பிடிக்கின்றனர். எனவே, மார்க்கெட்டில் மாடுகளை தடுத்துநிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மார்க்கெட் சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே, ஆக்கிரமிப்பு கடைகளை அப்புறப்படுத்தவேண்டும். கோயம்பேடு மார்க்கெட் சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு கடைகளுக்கு அங்காடி நிர்வாக அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றார்.

Tags : Coimbade Vegetable Market ,Minister ,B. K.K. SegarBabu , A modern park will be set up in 8 acres at Koyambedu vegetable market: Minister PK Shekharbabu interview
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...