×

அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை மீண்டும் வழங்க நடவடிக்கை: ஈரோட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் திண்ணை பிரசாரம்

ஈரோடு: அ.தி.மு.க. ஆட்சியில் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்ட 7.50 லட்சம் பேருக்கு மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருங்கல்பாளையம் பகுதிகளில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் இன்று வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது வீடுகளின் முன் இருந்த திண்ணைகளில் வாக்காளர்களுடன் அமர்ந்து சகஜமாக கலந்துரையாடினார். இது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது: திமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறி திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குகளை சேகரித்து வருகிறோம். இந்த ஆட்சி குறித்தான மதிப்பீடுகளில் மக்கள் மிகவும் திருப்திகரமாக இருக்கிறார்கள். இந்த ஆட்சியின் திட்டங்களும், முதலமைச்சரின் பணிகளும் வாக்காளர்களுக்கு மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஏறத்தாழ ரூ.400 கோடி மதிப்பில் ஈரோடு மாநகராட்சியில் கடந்த ஒன்றரை ஆண்டு கால ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகின்றன. ஈரோடு மாநகராட்சியில் எந்த பகுதிக்கு சென்றாலும் மழை நீர் வடிகால் பகுதி பாதாள சாக்கடை விரிவாக்க பணி என ஏராளமான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

அதனால் சாலைகள் கூட சில இடங்களில் சேதமடைந்திருக்கின்றன. பாதாள சாக்கடையும், புதிய மழைநீர் வடிகால் பணியும் முடிவுற்றால் மீண்டும் அந்த சாலைகள் புதுப்பித்து தரப்படும். அப்பணிகளுக்கும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் அந்த பணிகளும் செய்யப்படும். ஈரோடு மாநகராட்சி ஒரு மிகச்சிறந்த மாநகராட்சியாக வருவதற்கு அனைத்து கட்டமைப்புகளையும் மேம்படுத்த முதல்வர் ரூ.400 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொண்டு உள்ளார். அதிமுக ஆட்சியில் முதியோர் உதவித்தொகை வழங்குவதில் பல கட்டுப்பாடுகள் கொண்டு வந்தனர். குறிப்பாக ஆதரவற்ற முதியோர்களாக இருந்தாலும் ஆண் வாரிசு இருக்கக் கூடாது என்ற ஒரு விதியை கொண்டு வந்திருக்கிறார்கள். அதனால் 7.50 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு உரியவர்களுக்கு உதவித்தொகை வழங்க, ஆண் வாரிசு இருந்தாலும் ஆதரவற்றவர்களாக இருந்தால் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே வாங்கிக் கொண்டிருந்தவர்களுக்கும், நிறுத்தப்பட்டவர்களுக்கு அனைத்து வருவாய் அலுவலகங்களிலும் கணக்கெடுக்கப்பட்டு உதவித்தொகை வழங்கப்படுகிறது. கருங்கல்பாளையம் பகுதியில் பழமையான கிணறால் பல்வேறு பிரச்னை இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், இது குறித்து கருத்து கூற முடியாது. எனினும் தேர்தல் முடிந்தவுடன் அமைச்சர் முத்துசாமி உடன் கலந்து ஆலோசித்து இப்போது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு பொதுமக்கள் முடிவின்படி கிணற்றை சீரமைப்பதா அல்லது கிணற்றை நிரந்தரமாக மூடுவதா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு மா.சுப்பிரமணியம் கூறினார்.

Tags : Minister ,Subramaniam Shockle Prasaram , A.D.M.K. Action to restore the old age allowance which was stopped by the government: Erode Minister M. Subramaniam Dinnai campaign
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி