×

கோவையில் ரூ10.82 லட்சம் மதிப்புள்ள 157 கிலோ கஞ்சா சாக்லேட் சிக்கியது: வட மாநில வியாபாரி கைது

கோவை: கோவையில் ரூ.10 லட்சத்து 82 ஆயிரம் மதிப்புள்ள 157 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வியாபாரி கைது செய்யப்பட்டார். வெளிமாநிலங்களில் இருந்து பல்வேறு கும்பலை சேர்ந்தவர்கள் கஞ்சா சாக்லேட்டுகளை கடத்தி வந்து கோவையில் விற்பனை செய்து வருகிறார்கள். இதனையடுத்து கோவையில் கடந்த சில வாரங்களாக கஞ்சாகும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்து வருகின்றனர். இந்நிலையில்,​ பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு பிரிவு போலீஸ் டிஎஸ்பி வெற்றிச்செல்வன் மேற்பார்வையில் போலீசார் நேற்று கோவை அவிநாசி ரோட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது நீலாம்பூர் அருகே மொபட்டில் மூட்டையுடன் சந்தேகப்படும்படி ஒருவர் வந்தார். அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் பீகார் மாநிலம், ஜமூய் மாவட்டம்,​ அசல்மாநகரை சேர்ந்த திலீப்குமார் (38) என்பதும், இவர் தெக்கலூர் மெயின் ரோடு பகுதியில் கடந்த 22 ஆண்டுகளாக வசித்து வருவதும் தெரிய வந்தது. அவர் கொண்டு வந்த மூட்டையை பிரித்து பார்த்தபோது அதில் ஏராளமான கஞ்சா சாக்லேட்டுகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்து விசாரித்தபோது பீகாரில் இருந்து கஞ்சா சாக்லேட்டுகள் கடத்தி வந்து தான் நடத்தி வரும் மளிகை கடையில் விற்பனை செய்வதாக கூறினார்.

இதனையடுத்து அவரது மளிகைக்கடையை போலீசார் சோதனை செய்து ரூ.10 லட்சத்து 82 ஆயிரம் மதிப்புள்ள 157 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது ஒரு கஞ்சா சாக்லேட்டை ரூ.40க்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தாக கூறினார். இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து திலீப்குமாரை கைது செய்தனர். விசாரணையில் இவர் மீது ஏற்கனவே குட்கா விற்பனை செய்ததாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 3 வழக்குகள் உள்ளது என்பதும் தெரியவந்தது.

Tags : Coimbatore , 157 kg ganja chocolate worth Rs 10.82 lakh seized in Coimbatore: North state dealer arrested
× RELATED கோவை அவிநாசி மேம்பாலம், லங்கா கார்னரில் தேங்கிய மழைநீர் வெளியேற்றும் பணி