×

செய்தி மக்கள் தொடர்புத் துறையின் தமிழரசு இதழின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “இலக்கிய மலர் 2023”: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.!

சென்னை: செய்தி மக்கள் தொடர்புத் துறையின் தமிழரசு இதழின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “இலக்கிய மலர் 2023” - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் தமிழரசு இதழின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “இலக்கிய மலர் 2023” என்ற சிறப்பு மலரினை வெளியிட, அதன் முதல் பிரதியை தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இரண்டாம் மற்றும் மூன்றாம் பிரதிகளை சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் ராமகிருஷ்ணன் மற்றும் புகழ்பெற்ற ஓவியர் டிராட்ஸ்கி மருது ஆகியோர்  பெற்றுக்கொண்டனர்.

தமிழின் பெருமையையும், தமிழனின் சிறப்பையும், தமிழ்நாட்டின் பண்பாட்டையும் ஒற்றைக் கவிதையில் வடித்துத்தந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழியில், தமிழ்காக்கும் நல்ல பல திட்டங்களை அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. அதற்கு சிறப்பு சேர்க்கும் வகையில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி செய்தி மக்கள் தொடர்புத் துறையின் தமிழரசு இதழின் சார்பில் “இலக்கிய மலர் 2023” என்ற சிறப்பு மலர் தயாரிக்கப்பட்டுள்ளது. செய்தி மக்கள் தொடர்புத் துறையின் தமிழரசு மாத இதழ், அரசின் சாதனைகளை சொல்வது மட்டுமில்லாமல் சமகால இலக்கியங்களைக் காத்து வளர்க்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, தமிழ்நாட்டின் இலக்கிய மரபு, பண்பாடு, சமூக வளர்ச்சி போன்றவற்றை எடுத்துச்சொல்லும் விதமாக இந்த இலக்கிய மலரினை படைத்துள்ளது. இளைய தலைமுறையினருக்கு இலக்கிய ஆர்வத்தை ஊட்டும் விதமாக இம்மலரில் நூற்றுக்கணக்கான படைப்பாளர்கள், அரசியல் சிந்தனையாளர்கள், வரலாற்று அறிஞர்கள், மானுடவியல் ஆய்வாளர்கள் தங்களின் பங்களிப்பை அளித்துள்ளார்கள். மேலும், அறிஞர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள், விமர்சகர்கள், ஓவியர்கள் போன்றவர்களின் எழுத்தும், இலக்கியமும், அவர்களின் ஓவியங்களும், கவிதைகளும், கட்டுரைகளும், சிறுகதைகளும் இன்றைய இலக்கிய உலகத்தில் எங்ஙனம் படைக்கப்பட்டிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் நோக்கில் “இலக்கிய மலர் 2023” உருவாக்கப்பட்டுள்ளது.

Tags : Tamilarasu ,News Public Relations Department ,Chief Minister ,Stalin , 'Literary Flower 2023' prepared on behalf of Tamilarasu magazine of News Public Relations Department: Chief Minister M.K. Published by Stalin.
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்