×

தைப்பூச திருவிழாவில் இன்று தேரோட்டம் பழநி கோயிலில் ஒரே நாளில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம்: பறவைக்காவடி எடுத்து வந்து பரவசம்

பழநி: பழநி மலைக்கோயில் தைப்பூச திருவிழாவில் இன்று தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனைக்காண சுமார் 5 லட்சம் பக்தர்கள் குவிந்துள்ளனர். பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் இந்த ஆண்டு தைப்பூச திருவிழா கடந்த ஜன. 29ம் தேதி பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் சுவாமி தினமும் காலையில் தந்த பல்லக்கிலும், இரவில் ஆட்டுக்கிடா, காமதேனு, யானை, தங்கக்குதிரை, தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்றிரவு இரவு 7.30 மணிக்கு பெரிய நாயகி அம்மன் கோயிலில் நடந்தது. வள்ளி - தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாண கோலத்தில் காட்சியளித்தனர். தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு சுவாமி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேரில் ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, முத்திரை நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு நடக்கிறது. பழநி நகரில் நேற்று காலையில் இருந்தே தூறல் மழை பெய்தது. எனினும் தைப்பூசத்தையொட்டி காலை முதலே பழநியில் பக்தர்கள் குவிய துவங்கினர். அலகு குத்தியும், காவடி சுமந்தும், பறவைக்காவடி எடுத்தும் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற வந்தனர். காவடியாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், மயிலாட்டம், தேவராட்டம் போன்றவை காண்போரை பரவசமடைய செய்தது.

பெண்கள் முளைப்பாரி, மாவிளக்கு எடுத்து வந்தும், கும்மியடித்தும் வழிபாடு நடத்தினர். வின்ச், ரோப்கார் நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருந்து பயணம் செய்தனர். பழநியில் நேற்று ஒரே நாளில் 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தைப்பூச திருவிழாவயொட்டி, பழநியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டன. பக்தர்களின் வசதிக்காக கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன. சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் முதலுதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, பக்தர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன. பக்தர்களின் உடைமைகள், குழந்தைகள்  காணாமல் போனால் அறிவிப்பது, பக்தர்களின் சந்தேகத்தை தீர்ப்பது என 26  இடங்களில் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 24 மணிநேரமும் போலீசார்  பணியில் இருப்பார்கள். பாதயாத்திரை வழித்தடங்களில் 3 கிமீக்கு ஒரு பைக்  என்ற விகிதத்தில் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தைப்பூச திருவிழாவையொட்டி டிஐஜி அபிநவ்குமார் தலைமையில் 2,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.



Tags : Therottam Palani temple ,Thaipusa festival , 5 lakh devotees will visit Therottam Palani temple in Thaipusa festival in one day.
× RELATED போலீஸ் விசாரணை வேட்டவலம் அருகே