×

இந்திய சினிமாவின் பழம்பெரும் இயக்குனர் கே.விஸ்வநாத் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: இந்திய சினிமாவின் பழம்பெரும் இயக்குனர் கே.விஸ்வநாத் மறைவிற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: காலத்தால் அழியாத திரைக்காவியங்கள் மூலமாக இந்திய அளவில் மக்கள் மனமெங்கும் நிறைந்துள்ள மகா கலைஞர் இயக்குநர் கலாதபஸ்வி விஸ்வநாத்தின் மறைவு மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. சங்கராபரணம், சலங்கை ஒலி உள்ளிட்ட இசையை அடிநாதமாகக் கொண்ட காவியங்களை திரையில் வடித்த கலைச் சிற்பியான கே.விஸ்வநாத் நாட்டின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுடன், 5 தேசிய விருதுகள், 7 நந்தினி விருதுகள், 10 பிலிம்பேர் விருதுகள் மற்றும் ஆந்திர பிரதேச மாநில அரசின் விருது என எண்ணற்ற விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்று, திரைவானில் புகழ் நட்சத்திரமாக மின்னி வருபவர்.குறிப்பாக, அவரது புகழ்பெற்ற “சங்கராபரணம்” திரைப்படம் 43 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான அதே நாளில் கே.விஸ்வநாத் மறைந்திருப்பது என்பது அவரது தீராத கலைத்தாகத்தை காலக்கல்லில் கல்வெட்டாகச் செதுக்கிச் செல்லும் அரிய நிகழ்வாக அமைந்துள்ளது.

சிரிசிரி முவ்வா, சிப்பிக்குள் முத்து, சுருதியலயலு, சுபசங்கல்பம் என மேலும் பல உன்னதமான திரைப்படங்களை, பல மொழிகளிலும் இயக்கியவர் கே.விஸ்வநாத். அதுமட்டுமின்றி, 24க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சிறந்த கதாபாத்திரங்களில் தோன்றி நடித்துள்ளார். கே.விஸ்வநாத்தின் மறைவு, இந்திய திரை உலகுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். ‘கே.விஸ்வநாத் பிரிவால் வாடும் அவரது  குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சார்ந்த நண்பர்களுக்கும் ஆழ்ந்த  இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியுள்ளார்.

Tags : Chief Minister ,M.K.Stal ,K.Vishwanath. , Chief Minister M. K. Stalin condoles the death of legendary director of Indian cinema K. Viswanath
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...