×

சிறையில் இருக்கும் மாணவர் எம்.ஏ தேர்வில் முதலிடம்: தங்கப் பதக்கம் வழங்கி கவுரவித்தார் அசாம் ஆளுநர்

கவுகாத்தி: குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் முன்னாள் மாணவர் முதுகலை தேர்வில் முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு அசாம் ஆளுநர் ஜெக்தீஷ் முகி தங்கப் பதக்கம் வழங்கி கவுரவித்தார். அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஆர்ஜி பருவா சாலையில் கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் 12 பேர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பான வழக்கில் அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி இயக்கத்தை சேர்ந்தவராக கூறப்படும் மாணவர் சஞ்சிப் தலுக்தார்(29) கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

படிப்பின் மீதான தீராத ஆர்வத்தால், சஞ்சிப் சிறையில் இருந்தவாறே கிருஷ்ண காந்தா ஹேண்டிக்யு திறந்தவௌி பல்கலைக் கழகத்தில் எம்.ஏ சமூகவியல்  படிப்பில் சேர்ந்தார். சிறையில் இருந்தாலும் மனம் தளராமல் படித்த சஞ்சிப், முதுகலை படிப்பில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார். சிறைக்கம்பிகளுக்கு பின்னால் உள்ள அவருக்கு அசாம் ஆளுநர் ஜெக்தீஷ் முகி தங்கப்பதக்கம் வழங்கி கௌரவித்தார். இந்த சம்பவம் சஞ்சிப் குடும்பத்தினரை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து சஞ்சிப் தலுக்தாரின் சகோதரி டோலி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது,  “இது எங்களுக்கு மகிழ்ச்சியும், சோகமும் கலந்த தருணம். என் சகோதரருக்கு தங்கப் பதக்கம் கிடைத்த மகிழ்ச்சி ஒருபுறமிருந்தாலும், அவர் இன்னும் சிறையில் இருப்பது வேதனை தருகிறது. அவர் நிரபராதி என்பது எங்களுக்கு தெரியும். விரைவில் நீதி கிடைக்கும் என நம்புகிறோம்” என்று தெரிவித்தார். “கைது செய்யப்படும் சமயத்தில், தாவரவியலில் எம்பில் படித்து கொண்டிருந்த  சஞ்சிப் தலுக்கார், சிறையில் ஆய்வக வசதிகள் இல்லாத காரணத்தால் சமூகவியல் பாடத்தை தேர்ந்தெடுத்ததாக” டோலி மேலும் கூறினார்.

Tags : Assam Governor , Jailed student tops MA exam: Assam Governor felicitates with gold medal
× RELATED ராஜஸ்தான் தேர்தலில் பரப்புரை செய்த...