×

தாம்பரம் மாநகராட்சிக்கு முதல் முறையாக ஐஏஎஸ் அதிகாரி ஆணையராக பதவி ஏற்பு

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சிக்கு முதல் முறையாக பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் ஆணையராக பொறுப்பேற்றுள்ளார். சென்னை புறநகரில் உள்ள தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல், செம்பாக்கம் ஆகிய நகராட்சிகளும், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, மாடம்பாக்கம், சிட்லபாக்கம், திருநீர்மலை ஆகிய பேரூராட்சிகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு தாம்பரம் மாநகராட்சி தமிழகத்தின் 20வது மாநகராட்சியாக உருவாக்கப்பட்டது. இதற்கான அரசாணை கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் 4ம் தேதி வெளியானது.

இதனையடுத்து தாம்பரம் மாநகராட்சியின் முதல் ஆணையராக ஈரோடு மாநகராட்சி ஆணையராக இருந்த டாக்டர் எம்.இளங்கோவன், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் தேதி பதவியேற்று கொண்டார். அவர் பதவியேற்ற பின்னர் அவரது தலைமையில் தாம்பரம் மாநகராட்சி தேர்தல் நடைபெற்று மேயர், துணை மேயர், மண்டல குழு தலைவர்கள், நியமன குழு, கணக்கு குழு, பொது சுகாதார குழு, கல்வி குழு, வரிவிதிப்பு மற்றும் நிதி குழு, நகரமைப்பு குழு, பணிகள் குழு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து கடந்த 14 மாதங்களுக்கும் மேலாக ஆணையராக இளங்கோவன் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சிக்கு ஐஏஎஸ் அதிகாரியை ஆணையராக நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்ததோடு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாம்பரம் மாநகராட்சிக்கு ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்க வேண்டுமென பொது நல வழக்கு தொடரப்பட்டது. இதனால், கடந்த மாதம் 30ம் தேதி தேசிய சுகாதார இயக்கத்தின் மாநில நகர்ப்புற சுகாதார மேலாளராக பணியாற்றிய அழகுமீனா ஐஏஎஸ்சை, தாம்பரம் மாநகராட்சி ஆணையராக நியமித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டது. இதனை தொடர்ந்து நேற்று காலை தாம்பரம் மாநகராட்சியின் ஆணையராக, முதல் ஐஏஎஸ் அதிகாரி அழகுமீனா பொறுப்பேற்றுக்கொண்டார்.  

முன்னாள் ஆணையராக இருந்த டாக்டர்.எம்.இளங்கோவன், அவரிடம் மாநகராட்சிக்கான பொறுப்புகள் அடங்கிய கோப்புகளை ஒப்படைத்தார். பின்னர், ஆணையர் அழகுமீனா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘அனைவரின் ஒத்துழைப்புடன் தாம்பரம் மாநகராட்சியில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு பணிகளை சிறப்பாக செய்து முடிக்க நடவடிக்கை எடுப்பேன்,’’ என்றார். அதனைத் தொடர்ந்து, தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள், மாநகராட்சி ஆணையர் அழகுமீனாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் புதிய மாநகராட்சி ஆணையர் அழகுமீனா, அதிகாரிகளுடன் ஒவ்வொரு பகுதிகள் குறித்து முழுமையாக கேட்டறிந்து ஆலோசனை நடத்தினார்.

Tags : Tambaram Corporation , First time IAS officer accepted as Commissioner for Tambaram Corporation
× RELATED தாம்பரம் குப்பைக் கிடங்கில் தீ விபத்து..!!