×

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் இபிஎஸ், ஓபிஎஸ்சிடம் பாஜ நடத்திய பஞ்சாயத்து தோல்வி: ஆதரவு குறித்து 7ம் தேதிக்குள் அறிவிப்பு என சி.டி.ரவி அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளையும் ஒன்றிணைக்க பாஜ நடத்திய பஞ்சாயத்து தோல்வியில் முடிந்தது. ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைய எடப்பாடி உறுதியாக மறுத்துவிட்டார். வேட்பாளரை வாபஸ் வாங்க பன்னீர்செல்வமும் மறுத்து விட்டார். இதனால் இடைத்தேர்தலில் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவிக்க பாஜ முடிவு செய்துள்ளது. 7ம் தேதிக்குள் முடிவை அறிவிப்பதாக மேலிட பார்வையாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா உடல்நலக்குறைவால் மரணம் அடைந்ததையொட்டி, அந்த தொகுதியில் வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில், அதிமுக சார்பில் எடப்பாடி அணியை சேர்ந்த தென்னரசு, ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த செந்தில்முருகன் போட்டியிடுவதாக தனித்தனியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் இரண்டு அணிகளாக போட்டியிடுவதால், இபிஎஸ் - ஓபிஎஸ் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கு ‘இரட்டை இலை’ சின்னம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

முன்னதாக இபிஎஸ் - ஓபிஎஸ் அணியினர் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். ஆதரவு கேட்டு 10 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பாஜ சாதகமான முடிவை அறிவிக்கவில்லை. இந்த பரபரப்பான சூழ்நிலையில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கடந்த புதன்கிழமை திடீரென டெல்லி சென்றார். டெல்லியில் கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்து, தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தல் குறித்தும், பாஜ யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கருத்து கேட்டார். பின்னர் அன்று மாலையே சென்னை திரும்பினார். இந்த சூழ்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் ஒரு விளக்கத்தை அளித்துள்ளது. அதில், ‘‘அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. இரட்டை இலை சின்னத்தை வழங்குவது குறித்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கான தேர்தல் அதிகாரிதான் முடிவெடுப்பார்’’ என்று கூறியுள்ளது.

இந்நிலையில், நேற்று காலை 9 மணிக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தமிழக பாஜ மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர். அப்போது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழக பாஜவின் நிலைப்பாடு குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் அண்ணாமலை விளக்கி கூறினார். அதேநேரம், ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட்டால் அதிமுக தொண்டர்களின் வாக்கு முழுமையாக கூட்டணிக்கு கிடைக்கும். அதனால், வரும் 2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற வாய்ப்புள்ளது என்று கூறியதாக கூறப்படுகிறது. ஆனால், ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட எடப்பாடி பழனிசாமி உறுதியாக மறுத்துவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இந்த சந்திப்பு சுமார் 30 நமிடம் நடந்தது.
 
இதையடுத்து அண்ணாமலை, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்துக்கு சென்றார். அங்கு ஓ.பன்னீர்செல்வம் பாஜ தலைவர்களை சால்வை மற்றும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் முன்னாள் எம்எல்ஏ ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் உடனிருந்தனர். இந்த சந்திப்பின்போது, எடப்பாடி பழனிசாமியை சந்தித்தபோது பேசிய கருத்துகளை இருவரும் பகிர்ந்து கொண்டனர். அண்ணாமலை கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் மீண்டும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியே தொடர வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை நிறுத்தட்டும். நீங்கள் வேட்பாளரை வாபஸ் பெறுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் அதற்கு பன்னீர்செல்வம் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. என்னை ஒருங்கிணைப்பாளராக ஏற்றுக் கொண்டால் வேட்பாளரை வாபஸ் பெறுவேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் இபிஎஸ் - ஓபிஎஸ் ஆகியோரை இணைக்க பாஜ நடத்திய பஞ்சாயத்து தோல்வியில் முடிந்துள்ளது. அதேநேரம், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு பாஜ ஆதரவு தெரிவிப்பதாக சி.டி.ரவி வாக்குறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
 
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் சந்தித்து பேசிய தமிழக பாஜ மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் இணைந்து சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நேற்று நிருபர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால், அதிமுகவினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தோம். ஈரோடு இடைத்தேர்தல் குறித்து பேசினோம். பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறிய சில தகவல்களை இருவரிடமும் தெரிவித்தோம். அவர்களிடம் என்ன பேசினோம் என்பதை இப்போது வெளியிட இயலாது.

மேலும் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து பணியாற்றி இந்த தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்று  தெரிவித்தோம். நாங்கள் அதிமுகவை இணைக்க முயற்சித்து வருகிறோம். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய 7ம் தேதி வரை காலஅவகாசம் இருக்கிறது. அதுவரை பொறுமையாக இருங்கள். எதிர்க்கட்சியான அதிமுக தனித்தனி அணியாக நிற்காமல், ஒரே அணியாக, ஒரே வேட்பாளர் நிறுத்தப்பட்டு, திமுகவை எதிர்த்து வெற்றி பெற வேண்டும் என்பது தான் பாஜ தலைமையின் விருப்பம். இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் செந்தில்முருகன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். எடப்பாடி பழனிசாமி அணி வேட்பாளர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்யாமல் வருகிற 7ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : Panchayat ,BJP ,EPS ,OPSC ,Erode East ,Assembly Constituency ,C.T. Ravi , Panchayat defeat by BJP to EPS, OPSC in Erode East Assembly Constituency by-election: CD Ravi announced that support will be announced by 7th.
× RELATED மரக்கன்றுகள் நடல்