சென்னை செனாய்நகரில் உள்ள அம்மா அரங்கத்தில் பொதுமக்களின் அனைத்து குடும்ப சுப நிகழ்ச்சிகள், மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி: சென்னை மாநகராட்சி

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலம், பழைய வார்டு-101, புதிய வார்டு-102, சென்னை-30, செனாய் நகர், 8வது குறுக்கு தெருவில் உள்ள அம்மா அரங்கத்தில் குறைந்த வாடகையில் பொதுமக்களின் குடும்ப சுபநிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், கண்காட்சி,  பள்ளி, கல்லூரி நடத்தும் உள்விளையாட்டு போட்டி, பரிசளிப்பு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த முன்பதிவு செய்யப்படுகிறது.

அம்மா அரங்கத்தின் 19,890 சதுர அடி பரப்பளவில் உள்ள கீழ்த்தளம் வாகன நிறுத்த உபயோகத்திற்காகவும், 900 இருக்கைகளுடன் 19,890 சதுர அடி பரப்பளவில் குளிரூட்டி வசதியுடன் அமைக்கப்பட்ட தரைத்தளத்தில் நிகழ்ச்சிகள் நடத்தவும், 4,286 சதுர அடி பரப்பளவில் உள்ள இடைப்பட்ட தளத்தில் நிகழ்ச்சிக்கு முன்பதிவு மேற்கொள்பவர்களின் உபயோகத்திற்காகவும் (6 அறைகள்) மற்றும் 19,890 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள முதல் தளம் உணவு அருந்துவதற்கான உபயோகத்திற்காகவும் வழங்கப்படுகிறது.

இந்த அரங்கத்தில் மின்தூக்கி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேற்படி குளிரூட்டப்பட்ட அரங்கத்தில் பொதுமக்களின் நலன் கருதி தற்போது அனைத்து குடும்ப சுபநிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், கண்காட்சி, பள்ளி, கல்லூரிகள் நடத்தும் உள்விளையாட்டு போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா, பாராட்டு விழாக்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்த மன்றத்தின் அனுமதி பெறப்பட்டு முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.  இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேற்படி அம்மா அரங்கத்தில் நிகழ்ச்சிகள் நடத்த நாள் ஒன்றுக்கான வாடகை ரூ.2,28,440 எனவும், அரை நாள் வாடகை  ரூ.1,14,220 எனவும் (ஜி.எஸ்.டி. வரி, மின் கட்டணம் மற்றும் தூய்மைக் கட்டணம் நீங்கலாக) முன் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

மேலும், செனாய் நகர் அம்மா அரங்கத்தில் தரைத்தளம் நீங்கலாக இதரக் கட்டடம் (அல்லது) முதல் தளம் நீங்கலாக, இதரக் கட்டடத்தின் மொத்த பரப்பளவான 44,066 சதுர அடியை நிகழ்ச்சி நடத்துவதற்கான முழுநாள் வாடகைக் கட்டணம் ரூ.2,08,723/- எனவும், அரைநாள் வாடகைக் கட்டணம் ரூ.1,04,361/- எனவும் பொதுமக்கள் செலுத்தி முன்பதிவு மேற்கொள்ளலாம். தற்போது இந்த அரங்கத்துடன் 3,683 சதுர அடி பரப்பளவில் உணவு தயார் செய்யும் கூட வசதியுடன் இரண்டு தளம் கொண்ட கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.  மேலும், அரங்கத்திற்கு உணவு கொண்டு செல்ல இணைப்பு பால வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், முகூர்த்த தினங்கள் தவிர இதர நாட்களில் வணிக நோக்கத்துடன் செயல்படும் நிகழ்ச்சிகளான புத்தகக் கண்காட்சி, மகளிர் சுயதொழில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி, தனியார் நிறுவனங்களின் ஆலோசனைக் கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கும்அனுமதி வழங்கப்படும். தனியார் நிறுவனங்களால் நடத்தப்படும் திருமண மண்டபங்களின் கட்டணத்தைவிட சென்னை மாநகராட்சியின் அம்மா அரங்கம் (செனாய் நகர்) குறைவான கட்டணத்திலும், மிகவும் பிரம்மாண்டமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் தங்கள் இல்ல சுப நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரி, தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசுத் துறை சார்ந்த பாராட்டு  விழா, பரிசளிப்பு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகளை சென்னை மாநகராட்சியின் அம்மா அரங்கத்தில் நடத்த அண்ணாநகர் மண்டல அலுவலகம், எண்-36பி, 2வது குறுக்குத் தெரு, புல்லா அவென்யூ, செனாய் நகர், சென்னை-30ல் உள்ள அலுவலகத்தை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பயனடையுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Related Stories: