×

மேலவளவு முருகேசன் கொலை வழக்கு!: 13 பேரின் முன்கூட்டிய விடுதலையை ரத்து செய்யகோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை..!!

மதுரை: மதுரை மாவட்டம் மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உள்ளிட்ட 6 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 13 பேரின் முன்கூட்டியே விடுதலையை ரத்து செய்யகோரிய மனுக்களை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது. மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உள்ளிட்ட 6 பேர் 1997ல் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 13 பேர் பொது மன்னிப்பு அடிப்படையில் கடந்த 2019ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர். இவர்களின் விடுதலையை எதிர்த்து வக்கீல் ரத்தினம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதேபோல் கொலையானவர்களின் மனைவி மற்றும் தாய் தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஜெயசந்திரன், சுந்தர் மோகன் அமர்வு, அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், 13 பேரின் முன்கூட்டிய விடுதலை குறித்து அனைத்து தரப்பு சூழலையும் பரிசீலனை செய்த பிறகே தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. எனவே இதில் தலையிட விரும்பவில்லை என கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Tags : MURUGESAN MURUGESAN ,MURUGESAN ,iCort Branch , Melevali Murugesan, acquittal of criminals, iCourt branch
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்