×

இந்தாண்டு பருவமழை தொடங்குவதற்கு முன்பே கண்மாய், நீர்வரத்து ஓடைகளை தூர்வார வேண்டும்: ஆண்டிபட்டி, வருசநாடு பகுதி விவசாயிகள் கோரிக்கை

ஆண்டிபட்டி/ வருசநாடு: ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இதில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் கண்மாய் மூலம் பாசன வசதி பெற்று வருகிறது. ஆண்டிபட்டி ஒன்றியத்தில் ஆசாரிப்பட்டி கண்மாய், கன்னியப்பபிள்ளைபட்டி, வரதராஜபுரம் கண்மாய், அதிகாரி கண்மாய், செங்குளம், கருங்குளம் கண்மாய், மும்மூர்த்தி கண்மாய், தெப்பம்பட்டி கண்மாய், கோவில்பட்டி கண்மாய், ஜம்புலிபுத்தூர் கண்மாய் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கண்மாய்கள் மற்றும் குளங்கள் உள்ளன.

100க்கும் மேற்பட்ட கிணறுகளும் உள்ளன. இந்த பகுதிகளில் கத்தரி வெண்டை, தக்காளி, முருங்கை, வாழை மற்றும் பூ வகைகளில் மல்லிகை, முல்லை, பிச்சி உள்ளிட்ட பல்வேறு பூ ரகங்களும் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதனை தவிர மானாவாரிய பயிர் சாகுபடி முக்கிய பங்களிக்கிறது. கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை தேனி மாவட்டத்தில் பரவலாக பெய்தது. இதில் ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும், கிராமப் பகுதிகளும் பரவலாக மழை பெய்தது. ஆனால் கண்மாய் மற்றும் ஓடைகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாலும், தூர்வாரப்படாததாலும் நீர்வரத்து ஏற்படவில்லை.

ஒன்றிய பகுதிகளில் உள்ள கண்மாய்களிலும் ஒடைகளிலும் நீர்வரத்து ஏற்படவில்லை. இதனால் நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்பட்டது. இதனால் இறவை பாசனமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. மழை பெய்தும் கண்மாய்களில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது.பெரியாறு, வைகை ஆறு உள்ளிட்டவைகள் சில கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தும் ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளுக்கு பயன் இல்லாமல் இருக்கிறது. தலைமடையில் இருக்கும் வைகை அணை ஐந்து மாவட்ட விவசாயத்திற்கு முக்கிய பங்களித்து வருகிறது. ஆனால், ஆண்டிபட்டியில் வைகை அணை இருந்தும் பயனில்லாமல் உள்ளது.

திப்புரவு அணை திட்டம், வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்து ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் கிடப்பிலேயே உள்ளது. ஆண்டிபட்டி பகுதியில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு தொழில் பிரதான தொழிலாக உள்ளது. கண்மாய் ஓடைகள் ஆக்கிரமிப்பாலும், தூர்வாரப்படாததாலும், நீர்வரத்து இல்லாததாலும் கால்நடை வளர்ப்பு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதே நிலை தொடராத வகையில் இந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள அனைத்து கண்மாய்களையும், குளங்களையும், நீர்வரத்து ஓடைகளையும் தூர்வார வேண்டும். இதேபோல் கண்மாய்களிலும் நீர்வரத்து ஓடைகளிலும் ஆக்கிரம்பில் உள்ளதால் தண்ணீர் தேக்குவது பெரும் சிரமமாக உள்ளதால் ஆக்கிரமிப்பை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* கடமலை-மயிலை ஒன்றியத்தில் பரமசிவன் கோயில், கண்மாய், பெரியகுளம் ,சிறுகுளம், உள்ளிட்ட 12 கண்மாய்கள் உள்ளது. இந்த கண்மாய்களை சார்ந்து பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை, முருங்கை உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது. கடமலை-மயிலை ஒன்றியத்தில் நிலத்தடி நீர்மட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும், இந்த கண்மாய்களுக்கு மூலவைகை ஆறு மற்றும் மேகமலை அருவியில் இருந்து வரத்து வாய்க்கால்கள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, மழை பெய்து ஆறு மற்றும் அருவியில் நீர்வரத்து ஏற்படும் நேரங்களில் கண்மாய்களில் நீர்மட்டம் அதிகரித்து காணப்படும்.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக கண்மாய்க்கு அமைக்கப்பட்டுள்ள வரத்து வாய்க்கால்களில் எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதன் காரணமாக வரத்து வாய்க்கால் முழுவதும் மரம் செடிகள் ஆக்கிரமித்து காணப்படுகிறது. இதனால் கண்மாய்களுக்கு நீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. எனவே, ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டாலும் அது கண்மாய்களுக்கு செல்லுவதில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக மூல வைகை ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து காணப்படுகிறது. இதில் 5 க்கும் மேற்பட்ட முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது சாரல்மழை தொடங்கியுள்ள நிலையில் வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

அடுத்த 2 மாதங்களில் வெயில் காலம் தொடங்கிய பின்பு மழை பெய்ய வாய்ப்புகள் மிக குறைவு. பொதுவாக கோடை காலங்களில் கடமலை-மயிலை ஒன்றியத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கம். மேலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயமும் பாதிக்கப்படும். எனவே, மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மழை பெய்யும் நேரங்களில் கண்மாய்களின் வரத்து வாய்க்கால்களை சீரமைத்து கண்மாய்களில் நீரை தேக்கி வைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தண்ணீரின்றி விவசாயம் பாதிப்பு
இதுகுறித்து விவசாயிகள் தெரிவிக்கையில், ‘‘ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் தண்ணீர் இல்லாததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பலர் நிலத்தை விட்டு திருப்பூர், கோயம்புத்தூர் போன்ற பகுதிகளுக்கு வேலைக்கு சென்று விட்டனர். அரசு விவசாயிகளுக்கும், கால்நடை வளர்ப்பவர்களுக்கும் பல்வேறு திட்டங்களை ஒதுக்கீடு செய்தாலும் அதனை பயன்படுத்த முடியாத நிலையில் இப்பகுதி விவசாயிகள் உள்ளன. மேலும் ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு வருவதற்காக திட்டங்களும் தற்போது நிலுவையில் உள்ளது.

இதற்கு தீர்வாக முல்லைப் பெரியாற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து அனைத்து கண்மாய்களும் நிரப்புவது ஆகும். மேலும் மழைக்காலங்களில் அனைத்து கண்மாய்களையும் நீர்வரத்து ஓடைகளையும் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி சீரமைப்பு செய்தால் நீர்வரத்து ஏற்பட்டு, நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, இந்தாண்டு பருவமழை தொடங்குவதற்கு முன்பே அனைத்து கண்மாய், ஓடைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி நடவடிக்கை எடுத்தால், ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகள் வளமாக காணப்படும்’’ என்றனர்.

Tags : Kanmai ,Andipatti, Varusanadu , Farmers demand that this year's monsoon rains, Kanmai, watercourses should be dug
× RELATED பொன்னமராவதி அருகே கொன்னைக் கண்மாயில் மீன்பிடி திருவிழா கோலாகலம்