×

ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் மீனவர் வலையில் சிக்கிய ஆளில்லா குட்டி விமானம்: அமெரிக்காவை சேர்ந்தது

திருமலை: ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் மீனவர் வலையில் அமெரிக்காவை சேர்ந்த ஆளில்லா குட்டி விமானம் சிக்கியது. ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள சந்தபொம்மாலி அருகே கடலில் தினமும் ஏராளமான மீனவர்கள் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். அதன்படி, நேற்றும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க தங்களது படகுகள் மூலமாக சென்றுள்ளனர். அப்போது, ஒரு மீனவருக்கு 9 அடி நீளம்  111 கிலோ எடை உள்ள ஆளில்லா விமானம் சிக்கியது. இதனை அந்த மீனவர் கடற்கரைக்கு கொண்டு வந்து   கடலோர காவல் துறையினரிடம் ஒப்படைத்தார்.  இந்த ஆளில்லா விமானம் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த ஆளில்லா விமானத்தை யார் பயன்படுத்தினார்கள்?, எதற்காக பயன்படுத்தப்பட்டது   என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவை ராணுவ பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானம் என்பது தெரியவந்துள்ளது. இதுபோன்ற விமானம் இந்திய ராணுவம் மட்டுமின்றி பல வெளிநாடுகளிலும் உள்ள ராணுவத்தின் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது. இதுகுறித்து ராணுவ அதிகாரிகளுக்கும், புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி ஒடிசா மாநிலம், பாலசோர் மாவட்டத்தில் உள்ள தலபாடா கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கடற்கரையில் இருந்து  சுமார் 20 கி.மீ தொலைவில் மீன் பிடிக்க சென்றபோது ஆளில்லா விமானம் கிடைத்தது. அது இந்திய விமானப்படையின் ஐஏஎப் ரேடார் அளவுத்திருத்த பயிற்சியின் ஒரு பகுதியாக ட்ரோன் பறக்க விடப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.  இந்திய விமானப்படை அதிகாரிகள் வழக்கமாக விமானத்தில் இருந்து வான் ஏவுகணையை உண்மையான ஏவுகணைக்கு செல்வதற்கு முன் போர் விமானத்தில் உள்ள ரேடார் மூலம் அதை அளவீடு செய்ய இலக்கு ட்ரோன்களை பறக்க விடுவார்கள். இதுவும் அதுபோன்றது  தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Srikakulam ,USA , Srikakulam District, Fisherman's Net, Unmanned Aerial Vehicle,
× RELATED அமெரிக்காவில் ரோபோ நாய் அறிமுகம்…!!