×

ஒசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் 60க்கும் மேற்பட்ட யானைகள் தஞ்சம்: கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறை அறிவுறுத்தல்..!

ஒசூர்: ஒசூர் அருகே 60 காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானமாவு வனப்பகுதிக்கு, கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியிலிருந்து 14க்கும் மேற்பட்ட யானைகள் வந்துள்ளன. ஏற்கனவே 4யானைகள் முகாமிட்டிருந்த நிலையில், தற்போது குட்டிகளுடன் 14யானைகள் வந்துள்ளதால், யானைகளின் எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளது. அவை போடூர் பள்ளம் அருகில் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் நுழைந்து, அங்குள்ள விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது.

அதிகாலை நேரங்களில் மீண்டும் வன பகுதிக்கு சென்று விடும். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சானமாவு வனப்பகுதியிலிருந்து, நாயக்கனபள்ளி கிராம பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு யானைகள் சென்றன. அங்கு பயிரிடப்பட்டிருந்த தக்காளி, முட்டைகோஸ் பயிர்களை சேதப்படுத்தியது. கடந்த இரண்டு நாட்களாக வனப்பகுதியை ஒட்டியுள்ள சினிகிரிப்பள்ளி, ராமபுரம், அம்பலட்டி பகுதியில் உள்ள விளைநிலங்களில் விவசாய பயிர்கள் சேதப்படுத்தியுள்ளன. இதை பார்த்த பொதுமக்கள், உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வன ஊழியர்கள், பட்டாசு வெடித்து, கூச்சலிட்டு அருகில் உள்ள சானமாவு வனப்பகுதிக்கு யானைகளை விரட்டியுள்ளனர்.

இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை 40க்கும் மேற்பட்ட காட்டு யானை சானமாவு வனப்பகுதிக்கு வந்து சேர்ந்தது. ஏற்கனவே 18 யானைகள் சானமாவு வனப்பகுதியில் உள்ளது. இன்று காலை 40க்கும் மேற்பட்ட யானை வந்து சேர்ந்தது. இதனால் சானமாவு வனப்பகுதியில் 60க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளது. வனத்துறையினர் யானைகளை காட்டுப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வனப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags : Sanamavu ,Osur , More than 60 elephants sheltered in Sanamavu forest near Hosur: Forest Department advises villagers to be safe..!
× RELATED பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓசூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதல்