2ம் நாளாக ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ நிகழ்வில் அரசின் நலத்திட்டங்கள் பெற மக்களை அலைக்கழிக்க கூடாது: கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு

சென்னை: ‘அரசின் நலத்திட்டங்களை பெற, சில இடங்களில் மக்கள் அலைய வைக்கப்படுகிறார்கள் என்ற தகவல் வந்துள்ளது. மாவட்ட கலெக்டர்கள் அதை கண்காணித்து தடுக்க வேண்டும்’ என்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்களை நேரடியாக கள ஆய்வு மேற்கொள்வதற்காக ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தை நேற்று முன்தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் எஸ்பிக்களுடன் ஆலோசனை நடத்தினார். நேற்று 2வது நாள் ஆய்வுக் கூட்டம் நடந்தது.

அந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற கூட்டம் ஏதோ குறைகளைக் கண்டுபிடிப்பதற்காக நடக்கும் கூட்டம் அல்ல. மக்களுக்கான பணி சிறக்க வேண்டும் என்று, நோக்கமாக கருதிதான் கூட்டியிருக்கிறோம். மக்களுக்காகத்தான் அரசு. மக்களை மையப்படுத்தி இயங்குவதுதான் ஒரு நல்லரசாக அமைந்திட முடியும். இதை நாங்கள் மட்டுமல்ல, நீங்களும் நன்றாக அறிந்து அனைவரும் செயல்பட்டாக வேண்டும். நிர்வாகம் மேம்பட வேண்டும். தொய்வுகளை நீக்க வேண்டும். உங்களை உற்சாகப்படுத்துவதற்கும் உங்கள் பிரச்னையை நேரடியாக அறிவதற்கும் தான் இந்த ஆய்வுக் கூட்டம். உங்களுடைய கருத்துகளையெல்லாம் அரசினுடைய கவனத்தில் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்படும்.

கடந்த 20 மாத காலத்தில் நாம் ஆட்சிக்கு வந்து, எத்தனையோ திட்டங்களை தீட்டியிருக்கிறோம். அப்படி தீட்டிய திட்டங்களில் 80% மேலான பணிகளை நிறைவேற்றி உள்ளோம். இந்த ஒத்துழைப்பை நீங்கள் தொடர்ந்து வழங்க வேண்டும், இன்னும் வேகமாக வழங்க வேண்டும். அரசுத் துறைகள் எல்லாம் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. அதனால், பலரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். உங்களை இணைக்கும் ஒரே விவரம் மக்கள் நலன். அதனை நீங்கள் மறக்கவே கூடாது. பட்டா மாறுதல், சான்றிதழ் பெறுதல், அரசு நலத்திட்டங்களின் பயனடைதல் ஆகியவை எளிமையாக நடைபெற வேண்டும்.

மக்கள் இதற்காக சில இடங்களில் அலைய வைக்கப்படுகிறார்கள் என்ற தகவலும் வருகிறது. இதனை, கலெக்டர்கள் கண்காணித்து தடுக்க வேண்டும். அரசினுடைய முன்னுரிமை பணிகள் எவை என்பதை உணர்ந்து மாவட்ட நிர்வாகம் செயல்பட வேண்டும்.  உங்களது மாவட்ட எல்லைக்குட்பட்ட பணிகளை உன்னிப்பாக, கவனமாக கண்காணித்து செயல்படுத்தினால் அனைத்து திட்டங்களும் முழுமையாக மக்களை போய் சென்றடையும். அரசின் திட்டங்களை மக்களிடம் சேர்ப்பது அலுவலர்களது கடமையும், பொறுப்பும் ஆகும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.ேவலு, பொன்முடி, ஆர்.காந்தி, அரசின் தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் அதிகாரிகள், கலெக்டர்கள் கலந்து கொண்டனர்.

* பள்ளியில் சிற்றுண்டி பரிமாறிய முதல்வர்

வேலூர் பாரதி நகரில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சுகாதார நல மையத்தின் கட்டுமான பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். பின்னர், சத்துவாச்சாரி, சி.எம்.சி. காலனியில் செயல்பட்டு வரும் காலை உணவு திட்டத்தின் மைய சமையல் கூடத்தில் முதல்வர்  திடீர் ஆய்வு செய்தார். அங்கு, உணவு தயாரிப்பதை பார்வையிட்டார். ஊழியர்களிடம் தரமாகவும், சுவையாகவும் சிற்றுண்டி தயாரிக்கும்படி அறிவுறுத்தினார். தொடர்ந்து சத்துவாச்சாரி, காந்தி நகரில் உள்ள ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு வழங்கப்பட்ட காலை சிற்றுண்டியை ருசி பார்த்து தரத்தை ஆய்வு செய்தார். பின்னர், அங்கிருந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது முதல்வருடன் அங்கிருந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் செல்பி எடுத்து கொண்டனர்.

* மக்களோடு கலந்து பழகுங்கள்

கலெக்டர்கள், பணிளில் தொடர்ந்து தீவிர கள ஆய்வுகளை மேற்கொள்ளுங்கள். மக்களோடு கலந்து பழகுங்கள், அவர்களின் தேவையை உணர்ந்து செயல்படுங்கள். அரசு ஆணைகளை மட்டும் செயல்படுத்துவராக இல்லாமல், உங்களது   கனவுத் திட்டங்களையும் அரசுக்குச் சொல்லி, அதனையும் செயல்படுத்த முனையும் திறன் கொண்டவர்களாக நீங்கள் அனைவரும் இருக்க வேண்டும். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களும் வெகுசிறப்பாக செயல்பட வேண்டும் என்பதுதான் “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற திட்டத்தினுடைய நோக்கம். அதற்கு இந்த ஆய்வுக்கூட்டம் ஒரு சிறப்பான முதல் படியாக அமைந்திருக்கிறது என்று நான் கருதுகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

* மாணவர்களிடம் கேள்வி

வேலூர் அலமேலுமங்காபுரத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொருவரிடமும் என்ன படிக்கிறாய் என கேட்டறிந்தார். காலை சிற்றுண்டி திருப்தியாக உள்ளதா, ஒரே மாதிரியான உணவு வழங்கப்படுகிறதா என முதல்வர் கேட்டார். அதற்கு மாணவர்கள் திருப்தியாக உள்ளதாகவும், தினமும் புதுப்புது சிற்றுண்டி வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்தனர்.

* முதல்வரிடம் பேனா வழங்கிய சிறுமி

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு 9 மணிவரை நடந்தது. இதையடுத்து அங்கிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காரில் தனியார் ஓட்டலுக்கு புறப்பட்டார். அப்போது,  அங்கு நின்றிருந்த சிறுமியை பார்த்ததும் முதல்வர் தனது வாகனத்தை நிறுத்தினார். உடனே சிறுமி யாழினி (10), ஆவலுடன் அவரை நெருங்கி கையில் வைத்திருந்த பேனாவை வழங்கி, அதை கலைஞர் நினைவிடத்தில் வைக்குமாறு கூறினார். அதை பெற்றுக் கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறுமியிடம் கைகுலுக்கிவிட்டு புறப்பட்டு சென்றார்.

Related Stories: