×

மேகாலயா சட்டப்பேரவை தேர்தல் முதல்வரை எதிர்த்து போட்டியிடும் முன்னாள் தீவிரவாதி தலைவன்: பாரதிய ஜனதா அறிவிப்பு

ஷில்லாங்: மேகாலயா முதல்வர் கான்ராட் கே சங்மாவுக்கு எதிராக, முன்னாள் தீவிரவாதி பெர்னார்ட் மராக்கை பாஜ களமிறக்குகிறது. இதேபோல் நாகாலாந்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலையும் பாஜ வௌியிட்டுள்ளது. 60 தொகுதிகளை கொண்ட மேகாலயா, நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்களின் சட்டப்பேரவைக்கு இம்மாதம் 27ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதில் மேகாலயாவில் ஆளும் கட்சியுடனான கூட்டணியில் இருந்து பிரிந்து 60 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட பாஜ முடிவு செய்துள்ளது.

நாகாலாந்தின் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பாஜ 20 இடங்களிலும்,. மீதமுள்ள 40 இடங்களில் பாஜ கூட்டணி கட்சியான என்பிடிடி கட்சியும் போட்டியிடுகிறது. தேர்தல் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு மேகாலயா, நாகாலாந்து வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை பாஜ வௌியிட்டுள்ளது. அதன்படி, மேகாலயாவின் தெற்கு துரா தொகுதியில் போட்டியிடும் முதல்வர் கான்ராட் கே சங்மாவுக்கு எதிராக, மாநில பாஜ துணைத்தலைவரும், முன்னாள் தீவிரவாத இயக்க தலைவருமான பெர்னார்ட் மராக் போட்டியிடுவார் என்று தெரிவித்துள்ளது.

மேலும் தற்போதைய எம்எல்ஏக்கள் சன்போர் ஷுல்லாய் தெற்கு ஷில்லாங் தொகுதியிலும், ஏ.எல்.ஹெக் பைந்தோருக்ரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். நாகாலாந்து மாநில பாஜ தலைவர் தெம்ஜென் இம்னா அலோங், அலோங்டாகி தொகுதியில் போட்டியிடுகிறார். இதுகுறித்து நேற்று நிருபர்களிடம் பேசிய பாஜ செயலாளரும், வடகிழக்கு மாநில இணைபொறுப்பாளருமான ரிதுராஜ் சின்கா, “மோடி சக்தி என்ற அடிப்படையில் மேகாலாயாவின் 60 தொகுதிகளிலும் பாஜ பிரசாரம் செய்யும். ஒன்றிய அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைந்தாலும் ஊழலால் சோர்ந்து போயுள்ள மேகாலயா மக்கள் ஊழலற்ற ஆட்சி, விரைவான வளர்ச்சி தரக்கூடிய ஒரே நபர் என பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

* நாகாலாந்தில் 16 எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை
நாகாலாந்தில் பா.ஜ தலைமையிலான தேசியவாத ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக நெய்பியு ரியோ உள்ளார். நேற்று 40 தொகுதியில் போட்டியிடும் பா.ஜ கூட்டணி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில் 16 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. வடக்கு அங்காமி 2 தொகுதியில் முதல்வர் ரியோ நிறுத்தப்பட்டுள்ளார். பெரன் தொகுதியில் முன்னாள் முதல்வர்  ஜெலியாங் நிறுத்தப்பட்டுள்ளார்.

Tags : Meghalaya assembly polls ,Bharatiya Janata Party , Ex-terrorist leader to contest Meghalaya assembly polls: Bharatiya Janata Party announcement
× RELATED வெறுப்புணர்வைத் தூண்டும் பாஜகவின்...