ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்கள் மீது தாக்குதல் வெளியுறவு துறை கண்டனம்

புதுடெல்லி: ஆஸ்திரேலியாவில் உள்ள சுவாமி நாராயண் கோயில்மீது கடந்த 12ம் தேதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். அதன் பின் கேரம் டவுன்ஸ் பகுதியில் சிவா-விஷ்ணு ஆலயத்தைத் தாக்கிய மர்ம நபர்கள், இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை எழுதியிருந்தனர். மேலும், இஸ்கான் கோயிலும் சேதப்படுத்தப்பட்டது. சில நாட்களுக்கு முன் மெல்போர்னில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்கியதில் 2 இந்தியர்கள் படுகாயமடைந்தனர். இதற்கு ஒன்றிய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்‌ஷி கண்டனம் தெரிவித்தார்.

நேற்று அவர் கூறுகையில், ‘‘அமெரிக்காவை மையமாக வைத்து சீக்கியர்களுக்கான நீதி என்ற தடை செய்யப்பட்ட அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பு  பஞ்சாப்பை காலிஸ்தான் என்ற பெயரில் தனிநாடாக அறிவிக்க கோரி போராட்டங்களை நடத்தி வருகிறது. இதன் துாண்டுதலில் தான்,  இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடந்து வருகின்றன. ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்கள், அவர்களுடைய சொத்துக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இந்தியாவின் நலன்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆஸ்திரேலிய மண்ணை பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று அந்த நாட்டிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.  

Related Stories: