அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் இன்னும் பரப்புரை தொடங்காத நிலையில், திமுக கூட்டணி கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக பழனிசாமி அணியில் தென்னரசு, பன்னீர்செல்வம் அணியில் செந்தில்முருகன் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். இதேபோல் நாம் தமிழர், தேமுதிக, அமமுக உள்ளிட்ட கட்சியினரும் வேட்பாளர்களை அறிவித்து களம் இறங்கியுள்ளனர்.

காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அக்ராஹாரம் அன்னை சத்யா நகரில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சு.முத்துசாமி, நாசர், ராமசந்திரன் மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் ஒவ்வொன்றாக எடுத்துக்கூறி கை சின்னத்துக்கு ஆதரவு திரட்டிய அமைச்சர்களுடன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் சஞ்சய் சம்பத்தும் வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

முன்னதாக 15வது வார்டுக்கு உப்பட்ட தேர்தல் பணிமனையை அமைச்சர்கள் திறந்து வைத்தனர். பின்னர் பேட்டியளித்த அமைச்சர் முத்துசாமி, ஈரோடு மாநகராட்சியில், திமுக அரசின் சார்பில் 450 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதனிடையே காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் அதிமுக பழனிசாமி அணி வேட்பாளர் தென்னரசு ஆகியோர் நாளை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர்.

Related Stories: