வீடு புகுந்து கை, கால்களை கட்ட, இளம்பெண் கூட்டு பலாத்காரம் எஸ்.பி.யிடம் புகார்

தர்மபுரி: வேலை செய்த இடத்தில் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய கட்டிட மேஸ்திரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் புகார் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகேயுள்ள வண்ணாத்திப்பட்டி கிராமத்தை சேர்ந்த 34 வயது பெண்ணை 3 ஆண்டுகளாக கட்டிட வேலை வழங்கிய மேஸ்திரி மற்றும் அவரது உறவினரான மற்றொரு கட்டிட மேஸ்திரி, ஒரு விவசாயி ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பாலியல் பலாத்காரம் செய்ததோடு, வீடியோ எடுத்து மிரட்டுவதாக அவர்கள் மீது பென்னாகரம் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் அனைத்து மகளிர் போலீசில் அப்பெண் புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. வீடியோ எடுத்து மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று முன்தினம் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்தார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறியதாவது: பென்னாகரம் வண்ணாத்திப்பட்டியை சேர்ந்த டிரைவரான மணி என்பவருடன் எனக்கு திருமணம் நடந்தது. மகள், மகன் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். நான் கட்டிட வேலை செய்து வருகிறேன். நான் பென்னாகரம் ரங்காபுரம் காட்டுக்கொள்ளை கிராமத்தை சேர்ந்த மேஸ்திரி முருகன், வண்ணாத்திப்பட்டியை சேர்ந்த மேஸ்திரி காளியப்பன், வண்ணாத்திப்பட்டியை சேர்ந்த விவசாயி கணேசன் ஆகியோரிடம் வேலை செய்து வந்தேன். கடந்த இரண்டரை ஆண்டுகளாக முருகன் என்னை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். நான் கட்டிட வேலை செய்த இடங்களான பென்னாகரம், மாங்கரை, மோட்டுப்பட்டி, குட்டம்பட்டி, வண்ணாத்திப்பட்டி, கரியம்பட்டி, காட்டுக்கொள்ளை ஆகிய இடங்களில் சுமார் 150 முறைக்கும் மேல் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.

முதலில் பலாத்காரம் செய்யும்போது எனக்கு தெரியாமல் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, அதன்பிறகு என்னை மிரட்டி பலாத்காரம் செய்தார். நான் உடன்படாவிட்டால் சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவேன் எனக்கூறி மிரட்டி வந்தார். வீடியோவை வெளியே விடாமலிருக்க பணம் கேட்டு மிரட்டினார். நானும் பலரிடம் வாங்கி இதுவரை ரூ.3 லட்சம் வரை கொடுத்துள்ளேன். அவரிடம் 15க்கும் மேற்பட்ட வீடியோக்களும் புகைப்படங்களும் உள்ளன. இந்நிலையில் முருகனின் நண்பரான மேஸ்திரி காளியப்பனும், முருகனுடன் கூட்டு சேர்ந்து பலமுறை என்னை மிரட்டி பலாத்காரம் செய்தார். இதேபோல் முருகனின் நண்பரான கணேசன் என்பவரும் என்னை மிரட்டி பலாத்காரம் செய்தார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு எனது வீட்டிற்கு இரவு நேரத்தில் வந்த 3 பேரும் வீட்டிற்குள் வைத்து கூட்டு பலாத்காரம் செய்தனர்.

கை, கால்களை கட்டி, வாயை பொத்தி, சிறுநீர் கழித்து கொடுமைப்படுத்தினர். இதுகுறித்து வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டினர். இதனால் நான் உயிருக்கு பயந்து புகாரளிக்கவில்லை. பின்னர் வண்ணாத்திபட்டியில் இருந்து மாரண்டஅள்ளிக்கு சென்றுவிட்டேன். இந்த 3 பேருக்கும் மாதேஸ் என்பவர் உதவியாக இருந்தார். என்னை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபற்றி நான் புகார் தெரிவித்தும் போலீசார் என்னிடம் மட்டுமே விசாரித்தனர். ஒரு போலீஸ்காரர் என்னை அவதூறாக பேசினார். அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் பின்னணியில் அரசியல் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் உள்ளார். எனக்கு நீதி கிடைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: