நெல்லை - தென்காசி இடையே மின்மயமாக்கலுக்காக வெட்டப்படும் நிழல் தரும் மரங்கள்: பயணிகள் பரிதவிப்பு

நெல்லை: நெல்லை - திருச்செந்தூர் மார்க்கத்தில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவுற்று, அதிகாரிகளின் ரயில் சோதனை ஓட்டமும் முடிவடைந்து விட்டன. இந்நிலையில் நெல்லையில் இருந்து தென்காசி மார்க்கத்தில் தற்போது மின்மயமாக்கல் பணிகள் துரித கதியில் நடந்து வருகின்றன. இம்மார்க்கத்தில் உள்ள சேரன்மகாதேவி, அம்பை, கடையம், பாவூர்சத்திரம், தென்காசி வரை மின்மயமாக்கல் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் மின்மயமாக்கலை காரணம் காட்டி ரயில் நிலையங்களில் மரங்கள் வெட்டப்பட்டு வருவதாக பயணிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

நெல்லை - தென்காசி மார்க்கத்தில் சில இடங்களில் மட்டும் மரங்களை வெட்டாமல், அதற்குத் தகுந்தாற்போல் மின் கம்பங்கள் அமைத்து மின்மயமாக்கல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் தென்காசி ரயில் நிலையத்தில் 2 மற்றும் 3 வது நடைமேடையில் உள்ள நிழல் தரும் பெரிய மரங்கள் இப்ேபாது வெட்டப்பட்டு வருகின்றன. 2வது நடைமேடையில் பயணிகளுக்கு நிழல் தரும் மரங்கள் வெட்டப்படுவதற்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நெல்லை- தென்காசி மார்க்கத்தில் பயணிகளின் ரயில் பயணம் குளுமையாக இருப்பதற்கு, மேற்குத்தொடர்ச்சி மலையும், அதுசார்ந்த மரங்களுமே காரணமாகும். எனவே அம்மரங்களை வெட்டாமல் மின்கம்பங்களை அமைக்க வேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர்.

இதுகுறித்து ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறுகையில்,  ‘‘தென்காசி ரயில் நிலையத்தில் உள்ள மரங்களை வெட்டாமல், மரங்களின் இருப்பிடங்களுக்கு தகுந்தாற்போல் மின்கம்பங்களை அமைத்து வயர்களை அமைக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே மின்மயமாக்கல் பொது மேலாளர், தெற்கு ரயில்வே பொது மேலாளர், மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஆகியோருக்கு கடிதம் எழுதி உள்ளோம். பயணிகளின் நலன் கருதி இயற்கையாகவே நிழல் தரும் பெரிய மரங்களை வெட்டாமல் மின்மயமாக்கல் பணிகள் மேற்கொள்வதற்கு வழிமுறைகளும் உள்ளன. அவற்றை கையாண்டிட தெற்கு ரயில்வே முன்வரவேண்டும்.’’ என்றார்.

Related Stories: