×

எய்ம்ஸ் நிதி ஒதுக்கீடு இல்லாத ஏமாற்ற பட்ஜெட்

ஒன்றிய அரசின் பட்ஜெட் குறித்த கருத்துக்கள் வருமாறு :

* எஸ்.ரத்தினவேலு (வேளாண்  உணவுத்தொழில் வர்த்தக சங்கத்தலைவர்):
உள்கட்டமைப்புக்கு மிக அதிகமான  தொகையான  ரூ.10 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பது ltட்டை முன்னேற்றப்பாதையில் இட்டுச்செல்லும். அதேநேரம் மறைமுக வரியான ஜிஎஸ்டி சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்னைகளும் ஜிஎஸ்டி கவுன்சிலில்தான் விவாதித்து  முடிவெடுக்கப்படும் என்ற நடைமுறையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆண்டுக்கு  ரூ.18 லட்சம் கோடிக்கு மேல் ஜிஎஸ்டி வரியாக எவ்வித ஊதியமும் இல்லாமல்  வசூலித்து செலுத்துகின்ற கோடிக்கணக்கான தொழில் வணிகத்துறையினர், ஜிஎஸ்டி  வரி அமலாக்கம் குறித்து தெரிவிக்கின்ற சிரமங்களையும், வரிமுறையை  எளிமைப்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் பட்ஜெட் முன் ஆலோசனைக்கூட்டங்களில்  பரிசீலித்து பொருட்களுக்கான வரிவீதங்களை நிர்ணயிக்கும் முறை போன்ற முக்கிய  கொள்கை முடிவுகளைக்கூட பட்ஜெட்டில் அறிவிக்கப்படாமல் இருப்பது  ஏமாற்றமளிப்பதாக உள்ளது.

* தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தலைவர் ஜெகதீசன்:
பட்ஜெட்டில் சில சாதகமான அம்சங்கள் இருப்பினும், தொழில், வணிகத்துறையினரின் எவ்வித எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது. நேரடி வரிகளைப் பொறுத்தவரை கடந்த 8 ஆண்டுகளாக வருமான வரி விலக்கில் எவ்வித மாறுதலும் செய்யப்படாத சூழலில், வருமான வரிவிலக்கு வரம்பு ரூ 2.5 லட்சத்திலிருந்து 3 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பதும், வருமான வரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தி வரித்தள்ளுபடி கொடுக்கப்பட்டிருப்பதும் போதுமானதாக இல்லை. மேலும் வருமான வரிப்பிரிவு சட்டம் 44 ஏ.பி.யில் தற்போதைய வரம்பு ரூ.1 கோடியிலிருந்து ரூ.2 கோடியாக உயர்த்தப்பட வேண்டுமென தொழில் வணிகத்துறை சார்பாக ஏற்கனவே வலியுறுத்தியிருந்தும் உயர்த்தப்படவில்லை. இந்தியாவில் 6 கோடியே 30 லட்சம் சிறு, குறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் கொரோனா காலக்கட்டத்திற்கு முன்பிருந்த நிலையில், தற்போது அதில் 14 சதவீத தொழிற்சாலைகள் அதாவது சுமார் 88 லட்சம் நிறுவனங்கள் இந்தியா முழுவதும் இன்று வரை மூடப்பட்டுள்ள நிலையில், அவற்றின் புனரமைப்பிற்காக இப்பட்ஜெட்டில் ரூ.9,300 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்திருப்பது வெறும் கண்துடைப்பு.

* அ.முத்துகிருஷ்ணன் (எழுத்தாளர்):
பாஜ ஆட்சிக்கு வந்ததில் இருந்து பட்ஜெட் என்பது தேர்தலில் வாக்குறுதிகளை அள்ளிவீசும் ஒரு சடங்கு போல மாறிவிட்டது. சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் 60 லட்சம் வேலைவாய்ப்புகள் என்று நிர்மலா சீதாராமன் வாசித்துக் கொண்டிருந்தபோது, மோடி ஆட்சிக்கு வரும் போது வருடம்தோறும் இரண்டு கோடி பேருக்கு வேலை என்கிற அறிவிப்பு தான் நினைவுக்கு வந்தது. அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் கூட இந்த பட்ஜெட்டில் இல்லை என்பது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. ஒரு புறம் தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தியை திணிப்பதும் மறுபுறம் 1 முதல் 12ம் வகுப்பு வரை மாநில மொழி கல்வி ஊக்குவிக்கப்படும் என்கிற அறிவிப்பில் எது செயல்படுத்தப்படும் என்பதையும் அவர்களே தெளிவுபட கூறவேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற அறிவிப்பை காணோம். தொழில்துறையினருக்கும் ஏமாற்றம் தரும் பட்ஜெட்.

* திருமுருகன் (தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கத்தின் மாநிலத் தலைவர்):
தனி நபர் வருமானத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் புதிய வரி முறையின் கீழ்  தாக்கல் செய்யப்படுவோருக்கு மட்டுமே பொருந்தும். இது பெரும்பாலும் மாத  ஊதியம் வாங்குபவர்களுக்கு உதவும். அதிலும் எவ்வித கழிவு கிடைக்கப்பெறாது  என்று அறிகிறோம். பழைய வருமான வரி முறையின் கீழ் உள்ள தனிநபர்  வருமான வரி வரம்பு மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ஆதலால், வணிக வருமானம்  உள்ள நபர்களுக்கு எவ்வித பயன் இருப்பதாக தெரியவில்லை. சிறு தொழில்களை மேம்படுத்த எந்தவிதமான அறிவிப்பும் இல்லை.

* கல்லூரி பொருளியல் துறை பேராசிரியர் சி.முத்துராஜா:
இந்த ஆண்டு பட்ஜெட் பன்னாட்டு அமைப்புகளான ஜி20, ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி, உலக வர்த்தக மையம் ஆகியவற்றின் நோக்கம் மற்றும் பரிந்துரைகள் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியப் பொருளாதார நிலைமையை இந்த ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கை, இதன் அடிப்படையில் அமையும் வரவு செலவு திட்டம் விளக்கும்போது மூன்று முக்கிய கருத்துக்களை கூறுகிறது. வளர்ச்சி விகிதம் 6.5, பணவீக்க விகிதம் 6.8 மற்றும் வரவு செலவு திட்ட பற்றாக்குறை சதவிகிதம் 5.6-6. நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பினும், கவலைப்படும் வரவு - செலவு திட்டமாகவும் உள்ளது.


Tags : AIIMS is a fictitious budget with no allocation
× RELATED யானை தாக்கி விவசாயி பலி