×

ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் குட்டிகளுடன் 18 யானைகள் முகாம்: விவசாயிகள் அச்சம்

ஓசூர்: ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் 18 யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானமாவு வனப்பகுதிக்கு, கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியிலிருந்து 14க்கும் மேற்பட்ட யானைகள் வந்துள்ளன. ஏற்கனவே 4யானைகள் முகாமிட்டிருந்த நிலையில், தற்போது குட்டிகளுடன் 14யானைகள் வந்துள்ளதால், யானைகளின் எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளது. அவை போடூர் பள்ளம் அருகில் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் நுழைந்து, அங்குள்ள விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது.

அதிகாலை நேரங்களில் மீண்டும் வன பகுதிக்கு சென்று விடும். இந்நிலையில் நேற்று இரவு சானமாவு வனப்பகுதியிலிருந்து, நாயக்கனபள்ளி கிராம பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு யானைகள் சென்றன. அங்கு பயிரிடப்பட்டிருந்த தக்காளி, முட்டைகோஸ் பயிர்களை சேதப்படுத்தியது. கடந்த இரண்டு நாட்களாக வனப்பகுதியை ஒட்டியுள்ள சினிகிரிப்பள்ளி, ராமபுரம், அம்பலட்டி பகுதியில் உள்ள விளைநிலங்களில் விவசாய பயிர்கள் சேதப்படுத்தியுள்ளன. இதை பார்த்த பொதுமக்கள், உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வன ஊழியர்கள், பட்டாசு வெடித்து, கூச்சலிட்டு அருகில் உள்ள சானமாவு வனப்பகுதிக்கு யானைகளை விரட்டியுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: தென்பெண்ணை ஆற்றங்கரை பகுதியில் பண பயிர்கள் பயிரிடப்பட்டு வருவதால், இந்த பயிர்களை ருசி கண்ட காட்டு யானைகள், ஒவ்வொரு வருடமும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வந்து பிப்ரவரி வரை தங்கி சேதப்படுத்தி வருகின்றன. தென்பெண்ணை நதி வற்றாத ஜீவ நதியாக இருப்பதால், மூன்று போக சாகுபடி செய்யப்பட்ட வருகிறது.

அதிகமாக இந்த பகுதியில் முட்டைக்கோஸ், கேரட், பீட்ரூட், முள்ளங்கி, வெண்டைக்காய், பூசனிக்காய் உள்ளிட்ட நெற் பயிர்கள் பயிரிடப்படுகிறது. ஒவ்வொருவருடமும் சரியான நேரத்திற்கு வந்து, விளைநிலங்களை யானைகள் சேதப்படுத்தி வருகின்றனர். எனவே உடனடியாக இந்த யானைகளை, தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டிட வேண்டும் என்றனர்.



Tags : Sanamavu forest ,Hosur , 18 elephants camp with cubs in Sanamavu forest near Hosur: Farmers fear
× RELATED ஓசூர் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ