×

தமிழ்நாட்டுக்கு பெரிய அறிவிப்புகளோ, நிதி ஒதுக்கீடுகளோ இல்லாத ஏமாற்றங்கள் மிகுந்த பட்ஜெட்: கமல்ஹாசன்

சென்னை: தமிழ்நாட்டுக்கு பெரிய அறிவிப்புகளோ, நிதி ஒதுக்கீடுகளோ இல்லாத ஏமாற்றங்கள் மிகுந்த பட்ஜெட் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். வரும் 2023-24ம் நிதியாண்டிற்கான ஒன்றிய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், எதிர்பார்த்தபடியே வருமான வரிச்சலுகைகள் அறிவிக்கப்பட்டன. ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை பெறுபவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. செல்போன், டிவி உதிரிபாகங்களுக்கான சுங்க வரி குறைக்கப்பட்டது.

பெண்களுக்காக புதிய சிறுசேமிப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. தங்கம், வெள்ளி, வைரம், சிகரெட்டுக்கான வரிகளை ஒன்றிய அரசு உயர்த்தி உள்ளது. அடுத்த ஆண்டு நடக்கும் மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டே வருமான வரி விலக்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. இந்நிலையில் ஒன்றிய பட்ஜெட் குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்; கோடிக்கணக்கான மக்கள் அன்றாட வாழ்வை நகர்த்த அல்லாடும் சூழலில் இந்தியப் பொருளாதாரம் பிரகாசிக்கிறது என்ற வெற்றுப்  பெருமையுடன் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட்டில் ஏழை மக்களின் வாழ்வை மேம்படுத்த நேரடிப் பயன் தரும் திட்டங்கள் இல்லை.

நடுத்தர வர்க்கத்திற்கான சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வருவாய் இழப்பால் தவிக்கும் மிடில்க்ளாஸ் மக்களுக்கு இந்த வரிச்சலுகையால் பெரிய பலன் இருக்கப்போவதில்லை. கிராமப் பொருளியலை மேம்படுத்த, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க அறிவிப்புகள் ஏதும் இல்லை. சேமிப்பிற்குப் பதிலாக, செலவை ஊக்குவிக்கும் திட்டங்களும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உற்சாகமளிக்கும் அறிவிப்புகளும்தான் பட்ஜெட்டில் பளிச்சிடுகின்றன. வடக்கிற்குச் செழிப்பான, தமிழ்நாட்டிற்குப் பெரிய அறிவிப்புகளோ நிதி ஒதுக்கீடுகளோ இல்லாத, ஏமாற்றங்கள் மிகுந்த பட்ஜெட்தான் இது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Tags : Tamil Nadu ,Kamal Haasan , Budget full of disappointments with no big announcements or allocations for Tamil Nadu: Kamal Haasan
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...