ஷேர் ஆட்டோ மீது கார் மோதல் 2 பெண்கள் பரிதாப பலி: 7 பேர் படுகாயம்

சென்னை: கேளம்பாக்கம் அருகே ஷேர் ஆட்டோ மீது கார் மோதியதில், 2 பெண்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும், 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேளம்பாக்கம் அடுத்த கழிப்பட்டூரை சேர்ந்தவர் தசரதன் (50). இவர், தனக்கு சொந்தமான ஷேர் ஆட்டோவை நாவலூர் மற்றும் திருப்போரூர் இடையே ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் கேளம்பாக்கத்தில் இருந்து திருப்போரூர் நோக்கி ஆட்டோவை ஓட்டிச் சென்றார். அப்போது, ஆட்டோவில் 10 பயணிகள் இருந்தனர். காலவாக்கம் அருகே ஓஎம்ஆர் சாலையில் திருமண மண்டபம் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால், சாலையில் வாகனங்கள் வரிசைக் கட்டி நின்று கொண்டிருந்தன. சில நிமிடங்கள் நின்ற ஆட்டோ ஓட்டுனர் தசரதன் ஓஎம்ஆர் சாலை தடுப்பில் உள்ள இடைவெளியை பயன்படுத்தி, எதிர் திசையில் திடீரென பயணிக்க ஆரம்பித்தார். அப்போது, ஆலத்தூர் தனியார் நிறுவன அலுவலர் தாமஸ் மாத்யூ என்பவர் ஓட்டி வந்த கார், ஆட்டோவின் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரில் இருந்த டிரைவர் உள்ளிட்ட 9 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, பல்வேறு வாகனங்களில் வந்தவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு, ஆட்டோவில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், ஆட்டோவில் பயணித்த செம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த விஜயா (44), சிறுதாவூர் கிராமத்தை சேர்ந்த அம்சவள்ளி (53) ஆகிய 2 பேர் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சுவாதி (32), ஜோதி (52), செல்வி (40), அஞ்சலை (38), திலகவதி (45), முனுசாமி (எ) சுரேஷ் (50) மற்றும் ஆட்டோ ஓட்டுனர் தசரதன் (50) ஆகிய 7 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து திருப்போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டோ ஓட்டுனரின் அவசரத்தால் 2 உயிர்கள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: