×

சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு இழுவை வாகனம் மோதி குலுங்கியது விமானம்

சென்னை: விமானத்தில் இழுவை வாகனம் மோதி சேதமடைந்ததால் பயணம் ரத்து செய்யப்பட்டது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்திருந்து, டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம், நேற்று மாலை நடைமேடை 21ல் இருந்து புறப்படத் தயாரானது. விமானத்தில் 138 பயணிகள், 6 விமான ஊழியர்கள் உட்பட 144 பேர் இருந்தனர். விமானம் ஓடுபாதையில் ஓடத்தொடங்குவதற்காக, புஷ் பேக் செய்யும் இழுவை வாகனம், விமானத்தை நடை மேடையில் இருந்து, ஓடுபாதைக்கு தள்ளிச்சென்றது. அப்போது திடீரென இழுவை வாகனம், விமானத்தின் மீது மோதி விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து விமானம் பயங்கர குலுக்களுடன் ஓடுபாதையில் நின்றுவிட்டது. உடனடியாக விமானிகள், பொறியாளர்கள் விமானத்திலிருந்து கீழே இறங்கி, விமானத்தை ஆய்வுசெய்தனர். அதில் விமானம் சேதமடைந்து விட்டதால், இந்த விமானத்தை சீர்செய்யாமல் இயக்க முடியாது என்று விமானிகளும், பொறியாளர்களும் கூறினர். அதோடு சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானிகள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து டெல்லி செல்ல வேண்டிய விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டனர். சென்னை விமான நிலைய ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர். அதோடு அதில் அவசரமாக செல்ல வேண்டிய பயணிகள் மட்டும் நேற்று இரவு, டெல்லிக்கு மாற்று விமானங்களில் அனுப்பி வைக்க ஏர் இந்தியா அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். மற்ற பயணிகள் அனைவரும், சென்னை நகரில் பல்வேறு ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டனர். நாளை காலை இந்த விமானம் டெல்லிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து டெல்லியில் உள்ள டிஜிசிஏ எனப்படும் டைரக்டர் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேசன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Chennai airport , The plane was hit by a tow truck at Chennai airport and shook
× RELATED சென்னை விமான நிலையத்தில் டிஜியாத்ரா திட்டம் அறிமுகம்: வரும் 31ம் தேதி அமல்