×

வணிகர் நலனுக்கான திட்டங்களே ஒன்றிய பட்ஜெட்டில் இல்லை: வர்த்தகர்கள், பொருளாதார நிபுணர்கள் கருத்து

சென்னை: ஒன்றிய பட்ஜெட் குறித்து வர்த்தகர்கள், பொருளாதார நிபுணர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:
விக்கிரமராஜா(தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு): மகளிர்களுக்கான மகிளா சம்மான் திட்டம் கிராமப்புற வளர்ச்சிக்கான திட்டங்களும்  வகுக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய கைவினைத்தொழில், கலைத்தொழில்  செய்வோரை ஊக்கப்படுத்தும் திட்டம் மிகவும் புதுமையானது. அரசின் மூலதன செலவு கட்டமைப்பு 33 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கான 50ஆண்டு வட்டியில்லா கடன் தொடரும் என்பதும் மகிழ்ச்சிக்குரியது. இவை அனைத்தும் பிரதானமானதாக இருந்தும், அரசின் வருவாய்க்கு பிரதானமாக உள்ள வணிகர்களின் நலனுக்கான திட்டம் எதுவுமே பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. வணிகர்கள் மற்றும் தொழில் துறையினர்களுக்கான செயல்திட்டங்களோ, அவர்களின் மேம்பாட்டிற்கான திட்டங்களோ அறிவிக்கப்படவில்லை. வணிகர்களின் வாழ்வாதார உயர்விற்கான திட்டங்களோ, வணிகர்களின் முன்னேற்றத்திற்கும் மேம்பாட்டிற்கும் எவ்வித அறிவிப்புகளும் இல்லை.

ராஜாராமன்(ஆடிட்டர்): ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாதம் ரூ.60,000 சம்பளம் பெறுவோர் வரி செலுத்த வேண்டி இருக்கும், இந்த சம்பளத்திலேயே வீட்டு வாடகை, பெட்ரோல், சமையல் எரிவாயு உள்ளிட்ட செலவுகள் வரும். இது மிக குறைவு, ரூ.10 லட்சம் வரை விலக்கு அளித்திருக்க வேண்டும். அடிப்படை செலவுக்கு போக மக்களிடம் பணம் கையில் இருந்தால் தான் பணப்புழக்கம் அதிகரிக்கும். பெட்ரோல், டீசல் விலை குறைந்தால் தான் பணப்புழக்கம் அதிகரிக்கும். தங்கத்தின் இறக்குமதி வரி அரசின் முக்கிய வருமானமாக உள்ளது தங்கம் விலை எப்போதும் குறைய வாய்ப்பில்லை.

சோம வள்ளியப்பன்(பொருளாதார நிபுணர்): கட்டுமானங்களுக்கு  ஒதுக்கீடு அதிகரிப்பு, சிறுதானியங்களை ஊக்கப்படுத்துவது, பசுமை ஆற்றல், தனியார் நிறுவன பணியாளர்கள் விடுப்பை பணமாக்குவது உள்ளிட்ட பல வரவேற்க தக்க  அறிவிப்புகள் பட்ஜெட்டில் உள்ளது. வருமான வரி புதிய வரி விதிப்பு வரவேற்கத்  தக்க ஒன்று என்றாலும், பழைய வரி விதிப்பு முறையில் வழங்கப்பட்ட சலுகை வரம்பு அதிகரிக்கப்பட வில்லை. இதனால், பழைய வரி விதிப்பு முறையில் பயனடைய நினைப்பவர்களுக்கு எந்த சலுகையும்  வழங்கப்படவில்லை.

நாகப்பன்(பொருளாதார நிபுணர்): பல்வேறு முதலீடுகள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதை செயல்படுத்தினால் நிச்சயம்  பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படும். கிராம புற இளைஞர்களை தொழில்முனைவோர் ஆக  மாற்றுவதற்கு நிதி ஒதுக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். ஒரு திட்டமாக சிறப்பாக  உள்ளது ஆனால் செயல்முறைக்கு கொண்டு வரும் போதுதான் வெற்றி பெற முடியுமா என்பது அறிய முடியும். 12.31 லட்சம் கோடி கடன் வாங்க இலக்கு  தெரிவிக்கப்பட்டுள்ளது. கடன் சந்தையை ஊக்கப்படுதினால் இது பிரச்சனையாக இருக்காது. அதிக கடன் பெறும் போது வட்டி விகிதம் குறைவது கடினமாகி விடும். வருமான வரி புதிய வரி விதிப்பு வரவேற்கத்தக்க ஒன்று என்றாலும், பழைய வரி விதிப்பு முறையில் வழங்கப்பட்ட சலுகைகளின் வரம்பு அதிகரிக்கப்பட வில்லை என்பது ஒரு குறை. இதனால், பழைய வரி விதிப்பு முறையில் பயனடைய நினைப்பவர்களுக்கு எந்த சலுகையும்  கிடைக்காது.

Tags : Union budget , Union budget lacks schemes for businessmen's welfare: say traders, economists
× RELATED ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு...