கொலை முயற்சி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத ரவுடிகள் சுற்றிவளைப்பு: புழல் சிறையில் அடைப்பு

அண்ணா நகர்: சென்னை அண்ணாநகர் மாவட்டத்தில் அண்ணாநகர், அமைந்தகரை, அரும்பாக்கம், திருமங்கலம், ஜெ.ஜெ.நகர், நொளம்பூர், சூளைமேடு ஆகிய காவல்நிலையங்கள் உள்ளன. இந்த காவல் நிலையங்களில் செல்போன், செயின் பறிப்பு, வழிப்பறி, வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்த வழக்கு மற்றும் கஞ்சா வழக்கு மற்றும் கொலை, கொலை முயற்சி வழக்குகளில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை விரைந்து பிடிக்க அண்ணாநகர் துணை ஆணையர் ரோகித் நாதன் சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தனிப்படை அமைத்து தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை போலீசார் தேடும் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி உஷ் (எ) சந்திரசேகர் (28). இவர் மீது அமைந்தகரை, டி.பி சத்திரம், சேத்துப்பட்டு ஆகிய காவல்நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட சுமார் 8 வழக்குகள் உள்ளன. இவர், கடந்த 2020ல் ஏரியாவில் யார் தாதா என்ற முன்விரோத பகையால் ரவுடி கணேஷ் (எ) லிங்கம் என்பவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் அன்றே அமைந்தகரை போலீசாரால் கைது செய்து சிறையில் அடைப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடி, இந்த வழக்கு சம்பந்தமாக மூன்று மாதங்களாக உயர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக சுற்றிவந்தார். பின்னர் ரவுடி சந்திரசேகர் தினமும் இரவு நேரங்களில் வீட்டிற்கு வந்து செல்வதாக வந்த தகவலை அடுத்து நேற்று முன்தினம் அயனாவரத்தில் உள்ள ரவுடி சந்திரசேகர் வீட்டிற்கு சென்று ரவுடியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அரும்பாக்கத்தை சேர்ந்தவர் ரவுடி விக்கி என்ற விக்னேஷ் (25). இவர், கடந்த 2020ல் ரவுடி சதீஷ் என்பவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர் ஜாமீனில் வெளியே வந்த இவர், வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக சுற்றி வந்தார். இவரும் இரவு நேரங்களில் வீட்டிற்கு வந்து செல்வது பற்றி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அரும்பாக்கத்தில் உள்ள ரவுடி விக்னேஷ் வீட்டின் அருகே போலீசார் கண்காணித்தபோது அங்கு வந்த ரவுடி விக்னேஷை போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட இரண்டு ரவுடிகளையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: