×

நவீன நடமாடும் ஆலை மூலம் மெரினா கடற்கரையில் 852 டன் கழிவுகள் எரியூட்டம்: மாநகராட்சி தகவல்

சென்னை: நவீன நடமாடும் எரியூட்டும் ஆலை மூலம், மெரினா கடற்கரையில் இதுவரை 852  மெட்ரிக் டன் கழிவுகள் எரியூட்டப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.  இதுகுறித்து, சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:   சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5500 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது.  மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலமாக திடக்கழிவுகள் நாள்தோறும் வீடுகளுக்கே சென்று மக்கும், மக்காத குப்பையாக தரம் பிரிக்கப்பட்டு பெறப்படுகிறது.

இவ்வாறு பெறப்பட்ட தரம் பிரிக்கப்பட்ட குப்பை மறுசுழற்சி நிலையங்களில் உரமாகவும், எரிவாயுவாகவும் மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது. கொடுங்கையூரில் தினசரி 50 மெட்ரிக் டன் எரியூட்டும் திறன் கொண்ட ஆலை மற்றும் மணலியில் தினசரி 10 மெட்ரிக் டன் எரியூட்டும் திறன் கொண்ட ஆலைகளில் உலர்க்கழிவுகள் எரியூட்டம் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த போகி பண்டிகையை முன்னிட்டு சேகரிக்கப்பட்ட குப்பை இந்த நிலையங்களில் எரியூட்டம் செய்யப்பட்டன.  இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் சுற்றுச்சூழலை பாதுகாத்திடும் வகையில் இங்கு சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் மற்றும் இதர  உலர்கழிவுகள் அங்கேயே எரியூட்டம் செய்திடும் வகையில், பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ரூ.2.10 கோடி மதிப்பில்  நவீன நடமாடும் எரியூட்டும் ஆலை நிறுவப்பட்டு கடந்த ஆண்டு ஏப்ரல் 28ம்தேதி முதல் செயல்பாட்டில் உள்ளது.
 
இந்த நவீன நடமாடும் எரியூட்டும் ஆலை நாளொன்றுக்கு சுமார் 5 மெட்ரிக் டன் அளவிலான உலர் கழிவுகளை எரியூட்டும் திறன் கொண்டது. இந்த நவீன நடமாடும் எரியூட்டும் ஆலையில் இதுவரை 852 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் மற்றும் இதர உலர் கழிவுகள் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சுற்றுச்சூழல் விதிகளுக்குட்பட்டு எரியூட்டம் செய்யப்பட்டுள்ளது.   இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Marina Beach , 852 Ton Waste Incineration at Marina Beach with Modern Mobile Plant: Corporation Information
× RELATED கடலில் பிளாஸ்டிக், ரசாயனம் கலப்பதை தடுக்க விழிப்புணர்வு படகு பயணம்