×

பயண நேரத்தை குறைக்கும் வகையில் தமிழ்நாட்டில் முக்கிய ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும்: தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: பயண நேரத்தை குறைக்கும் வகையில் தமிழ்நாட்டில் முக்கிய ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் வழித்தடத்தில் வேகத்தை அதிகரித்து, பயண நேரத்தை குறைக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக, தண்டவாளம் மற்றும் சிக்னல் முறையை மேம்படுத்துதல், வேகக் கட்டுப்பாடுகளை அகற்றுதல், பாலங்களை சீரமைத்தல், மேம்பாலம் மற்றும் சுரங்கம் கட்டுமானப் பணிகளை செய்தல் ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே சென்னை சென்ட்ரல்-கூடூர், சென்னை சென்ட்ரல்-அத்திப்பட்டு, சென்னை-அரக்கோணம்-ரேணிகுண்டா ஆகிய வழித்தடங்களில் சமீபத்தில் அடுத்தடுத்து சோதனை ஓட்டம் நடைபெற்றது.

அப்போது, இந்த வழித்தடங்களில் மணிக்கு அதிகபட்சம் 145 கி.மீ. வேகம் வரை ரயில் இன்ஜினை இயக்கி சோதனை நடத்தப்பட்டது. இந்த நிதி ஆண்டில் சென்னை-கூடூர், சென்னை-ரேணிகுண்டா ஆகிய 2 வழித்தடங்களில் 130 கி.மீ. வேகம் வரை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தஞ்சாவூர்-பொன்மலை, விருத்தாசலம்-சேலம், விழுப்புரம்-புதுச்சேரி, மதுரை-திருநெல்வேலி, விழுப்புரம்-காட்பாடி, அரக்கோணம்-செங்கல்பட்டு, திருநெல்வேலி-தென்காசி, திருநெல்வேலி-திருச்செந்தூர், தஞ்சாவூர்-நாகர்கோவில் ஆகிய 9 வழித்தடங்களில் 110 கி.மீ. வரை வேகத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையிலிருந்து ரேணிகுண்டா மற்றும் அரக்கோணத்திலிருந்து ஜோலார்பேட்டை வரை இயக்கப்படும் ரயில்களின் வேகத்தை 110 கிலோமீட்டரில் இருந்து 130 கிலோமீட்டராக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை, பெங்களூர், மும்பை உள்ளிட்ட வழித்தடங்களில் செல்லும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க திட்ட அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஒப்புதல் வழங்கப்பட்ட பிறகு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் முதல் சென்னை-பெங்களூரு வழித்தடத்தில் ரயில்கள் 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி வளைவுகளை சீர்படுத்துவது, ரயில் பாதைகளில் பொதுமக்கள் அனுமதியின்றி கடக்கும் இடங்களில் தடுப்பு சுவர்கள் கட்டுவது உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், ரயில்களில் எல்எச்பி எனும் நவீன பெட்டிகள் இணைக்கப்படுவதால், ரயில்களின் வேகம் மேம்பட்டு வருகிறது.


Tags : Tamil Nadu ,Southern Railway , Speed of major trains to be increased in Tamil Nadu to reduce travel time: Southern Railway Information
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...