×

பங்குச்சந்தையில் அதானி குழுமம் ரூ.17 லட்சம் கோடி மோசடி: செபி, ஆர்பிஐ விசாரிக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: மதிமுக பொது செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் முதலீட்டு ஆய்வு நிறுவனம், பங்குச்சந்தையில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மேற்கொள்ளும் தில்லுமுல்லுவை அம்பலப்படுத்தி வருகிறது. தற்போது அந்த நிறுவனம் கடந்த வாரம்  ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் அதானி குழுமம் வரம்புக்கு மீறி கடன் பெற்றுள்ளது. இதனால் நிலையற்ற தன்மையில் அதானி குழும நிறுவனங்கள் உள்ளன” என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.அதுமட்டுமின்றி, அதானி குழுமத்தின் போலி நிறுவனங்கள் குறித்த புகைப்பட ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளது.

அதோடு, அதானி குழுமத்தின் மோசடி தொடர்பாக 88 கேள்விகளையும் ஹிண்டன்பர்க் எழுப்பியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அதானி குழுமம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து, வழக்கு தொடர உள்ளதாக எச்சரித்து உள்ளது.கருப்புப் பண ஒழிப்பு பற்றி பேசும் ஒன்றிய பாஜக அரசு, தனக்கு நெருக்கமான நிறுவனத்தின் இந்த சட்டவிரோதச் செயல்களைப் பார்த்து கண்ணை மூடிக் கொண்டு இருக்கிறதா? இந்த குற்றச்சாட்டுகளை பெயரளவில் விசாரிக்காமல் முழுமையாக செபி விசாரிக்குமா?அதானி குழுமத்தின் பங்கில் 8 சதவீதத்தை, அதாவது ரூ.74,000 கோடி பங்குகளை எல்ஐசி வைத்துள்ளது.

மேலும், அதானி குழுமத்தின் கடனில் 40 சதவீதத்தை ஸ்டேட் பேங் ஆப் இந்தியா வங்கி வழங்கி உள்ளது. எனவே, அதானி குழுமம் முறைகேடு செய்து தனது பங்கு மதிப்பை தன்னிச்சையாக உயர்த்தி, அவற்றை அடமானமாக வைத்து, எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளில் கடன் பெற்றதா? என்பது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி விசாரணை நடத்த வேண்டும். இது உண்மையாக இருந்தால் எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளின் நிதிநிலை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, பொதுநலன் கருதி இந்திய பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபி மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவை உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Tags : Adani Group ,SEBI ,VICO , Adani Group's Rs 17 Lakh Crore Scam in Stock Exchange: SEBI, RBI to Probe: VICO Urges
× RELATED அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. செய்த ...