×

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் கேப்டனாக கிரேக் எர்வின் நியமனம்

ஹராரே: மேற்கிந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் கேப்டனான கிரேக் எர்வின் நியமிக்கப்பட்டுள்ளார். கிரேக் பிராத்வெய்ட் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி, தற்போது ஜிம்பாப்வே சென்றுள்ளது. இந்த அணி ஜிம்பாப்வேயில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் வரும் 4ம் தேதி முதல் 8ம் தேதி நடைபெற உள்ளது. 2வது டெஸ்ட் போட்டி வரும் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெற உள்ளது. இரு போட்டிகளுமே புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளன.

இந்த டெஸ்ட் தொடருக்கான ஜிம்பாப்வே அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் கேப்டனாக 37 வயதான இடது கை பேட்டரான கிரேக் எர்வின் நியமிக்கப்பட்டுள்ளார். அணியின் வழக்கமான கேப்டன் சீன் வில்லியம்ஸ் காயம் காரணமாக இந்த டெஸ்ட் தொடரில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தவிர அணியின் முக்கியமான வீரர்கள் சிகந்தர் ராசா, ரியான் பர்ல், டெண்டாய் சடாரா மற்றும் முசாராபானி ஆகியோரும் இத்தொடரில் பல்வேறு காரணங்களால் ஆடவில்லை.
தற்போது கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள கிரேக் எர்வின், இதுவரை 18 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் அவரது சராசரி 35.53 ரன்கள். அதில் அவர் 3 சதங்கள், 4 அரை சதங்களுடன் 1,208 ரன்களை குவித்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஜிம்பாப்வே அணி: கேரி பாலன்ஸ், சமுனோர்வா சிபாபா, டனாகா சிவாங்கா, கிரேக் எர்வின் (கேப்டன்), பிராட்லே இவான்ஸ். ஜாய்லார்ட் கும்பி, இன்னொசன்ட் கையா, டனுனுர்வா மகோனி, வெலிங்டன் மசகாட்சா, குட்சாய் மனுன்சே, பிராண்டன் மவுடா, ரிச்சர்ட் நிகாரவா, விக்டர் நியாச்சி, மில்டன் சும்பா, டொனால்ட் திரிபானோ மற்றும் டபாட்ஸ்வா சிகா.

Tags : West Indies ,Craig Erwin ,Zimbabwe cricket , Test series against West Indies: Craig Erwin appointed as captain of Zimbabwe cricket team
× RELATED ஐசிசி உலக கோப்பை ‘டூர்’ நியூயார்க்கில் தொடங்கியது