ஊட்டி - குன்னூர் சாலையில் வேலிவியூ பகுதியில் கம்பி வலை தடுப்புசுவர் கட்டும் பணிகள் தீவிரம்

ஊட்டி : ஊட்டி  - குன்னூர் சாலையில் வேலிவியூ பகுதியில் கம்பி வலை தடுப்புசுவர் கட்டி  சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.  

நீலகிரி  மாவட்டத்தை பிற மாவட்டங்களுடன் இணைக்கும் முக்கிய சாலையாக கூடலூரில்  இருந்து ஊட்டி, குன்னூர் வழியாக மேட்டுபாளையம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை  உள்ளது. வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் அதனால்  ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை சரி செய்யும் நோக்கில் இச்சாலையில் கடந்த  3 ஆண்டுகளுக்கும் மேலாக விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. குன்னூர்  முதல் ஊட்டி வரை 14 கி.மீ., தூரத்திற்கு ரூ.27 கோடி மதிப்பில் மேம்பாட்டு  பணிகள் நடைபெற்று வருகின்றன.

சாலை குறுகலாக இருந்த இடங்கள், விபத்து  ஏற்படும் இடங்கள் கண்டறிந்து விரிவாக்கம் செய்து தடுப்புசுவர் அமைத்தல்,  மழைநீர் வழிந்தோட வசதியாக நிலத்தடி குழாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து  வருகிறது. வேலிவியூ பகுதியில் குறுகலாக உள்ள பகுதிகளில் சாலையை  விரிவாக்கம் செய்யும் வகையில் வழக்கமான தடுப்பு சுவர்போல் இல்லாமல் இந்தத்  தடுப்பு சுவர் கற்கள் கம்பி வலைகளின் உதவியுன் கட்டும் பணி கடந்த  டிசம்பரில் துவக்கப்பட்டது.

கேபியன் வால் எனப்படும் கற்கள் மற்றும்  துரு பிடிக்காத வலைக்கம்பிகளைக் கொண்டு கட்டப்படும் இந்த தடுப்புசுவர்,  கட்டுமானத்துக்கு மணல், சிமென்ட் அதிகம் தேவைப்படாது. மேலும், எவ்வளவு மழை  பெய்தாலும் இடிந்து விழாமல் நீரை வெளியேற்றி தாங்கி நிற்கும்.  சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது, தற்போது இந்த தடுப்புசுவர்  கட்டும் பணிகள் 75 சதவீதம் அளவிற்கு நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகளும்  இம்மாத இறுதிக்குள் நிறைவடைந்து விடும். முழுமையாக நிறைவடையும் பட்சத்தில்  வேலிவியூ பகுதியில் சாலை விரிவாகி போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு  இருக்காது என நெடுஞ்சாலைத்துறையினர் ெதரிவித்தனர்.

Related Stories: