×

இரணியல் டாஸ்மாக் கடை கொள்ளையர்களை பிடிக்க டி.எஸ்.பி. தலைமையில் 3 தனிப்படைகள்-மர்ம நபர்களின் கைரேகைகள் சிக்கின

திங்கள்சந்தை : இரணியல் டாஸ்மாக் கடையில் ரூ.4.50 லட்சம் மதுபாட்டில்கள் கொள்ளையில் விசாரணை நடத்த டி.எஸ்.பி. தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
குமரி மாவட்டம் இரணியல் கீழமணியன்குழியில் டாஸ்மாக் கடை உள்ளது. கடந்த 29ம்தேதி இரவு இந்த கடை ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், கடையில் இருந்த 2,074 மது பாட்டில்களை ெகாள்ளையடித்து சென்றனர். இதன் மொத்த மதிப்பு ரூ.4 லட்சத்து 44 ஆயிரத்து 390 ஆகும். இந்த ெகாள்ளை சம்பவம் குறித்து கடையின் மேற்பார்வையாளர் மிக்கேல் ராஜன் அளித்த புகாரின் பேரில், இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளை நடந்த கடையில் சிசிடிவி கேமராக்கள் உள்ளன. ஆனால் கொள்ளையர்கள் சிசிடிவி கேமரா பதிவுகள் அடங்கிய டிவிஆர் பாக்ஸையும் எடுத்து சென்று விட்டனர். எனவே கொள்ளையர்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்த டி.எஸ்.பி. தங்கராமன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடையில் இருந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமாக மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளன. 2 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் சேர்ந்து தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொள்ளையடித்த மது பாட்டில்களை லோடு ஆட்டோ அல்லது ஆட்டோவில் ஏற்றி கொண்டு சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து லோடு ஆட்டோ டிரைவர்கள் சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொள்ளை நடந்த டாஸ்மாக் கடைக்கு வெளியே சுமார் 1,500 மதுபாட்டில்கள் கொண்ட பாக்ஸ்கள் இருந்தன. இவற்றையும் ெகாள்ளையடிப்பதற்காக எடுத்து வெளியே வைத்துள்ளனர். ஆனால் ஆள் நடமாட்டம் இருந்ததால் அப்படியே விட்டு விட்டு சென்று விட்டனர் என கூறப்படுகிறது. கொள்ளை நடந்த டாஸ்மாக் கடை இருக்கும் சாலையில் சில கட்டிடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. அந்த கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

மேலும் கடையில் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடந்தது. இதில் 2 கைரேகைகள் சிக்கி உள்ளன. இதன் அடிப்படையில் பழைய குற்ற சம்பவங்களில் தொடர்பு உடைய ெகாள்ளையர்களின் ரேகைகளை ஒப்பிட்டு பார்த்து வருகிறார்கள். இரணியல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் யாராவது தலைமறைவாகி உள்ளார்களா? என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது. கொள்ளையடிக்கப்பட்ட மது பாட்டில்களை எங்கு பதுக்கி வைத்து இருப்பார்கள்? அவற்ைற திருட்டுத்தனமாக விற்பனை செய்ய திட்டமிட்டு இருக்கலாமா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. திருட்டு மது விற்பனை வழக்கில் தொடர்புடைய சிலரையும் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சுவற்றில் துளையிட்டு ஒத்திகை?

கொள்ளை நடந்த டாஸ்மாக் கடையில் ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன், சுவற்றில் துளையிட்டு 2  மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இரண்டு மது பாட்டில்கள் மட்டுமே  திருடப்பட்டு இருந்ததால், காவல்துறையும் இதை பெரிதாக எடுத்துக் கொள்ள  வில்லை. ஆனால் தற்போது ரூ.4.50 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள்  கொள்ளையடிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே சுவற்றில் துளையிட்டு ஒத்திகை  பார்த்த ெகாள்ளையர்கள் தான், தற்போது மீண்டும் கொள்ளையடித்து சென்று  இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Tags : DSP ,Tasmac , Monday Market: DSP to investigate robbery of Rs 4.50 lakh liquor bottles at Iranial Tasmac shop. Led by 3 privates
× RELATED போச்சம்பள்ளி அருகே பயங்கரம்...