ஸ்பிக்நகர் : தூத்துக்குடி மாவட்டத்தில் சாலையோரங்கள் மற்றும் குளங்களை ஆக்கிரமித்து வளரும் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இந்த மரங்கள், சாலைகளில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை பதம் பார்த்து வருகின்றன. மேலும் மாவட்டத்தில் விவசாய நிலங்கள் அதிகளவில் உள்ள அத்திமரப்பட்டி, காலாங்கரை, கோரம்பள்ளம், செபத்தையாபுரம், போடம்மாள்புரம், கூட்டாம்புளி, குலையன்கரிசல் உள்ளிட்ட பகுதிகளில் ஓடும் பெட்டைகுளம் மற்றும் கோரம்பள்ளம் குளத்திலும் கருவேல மரங்கள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன.
கோரம்பள்ளம் மற்றும் பெட்டைகுளம் தூர்வாரப்படாத காரணத்தாலும், குளம் முழுவதும் காணப்படும் கருவேல மரங்களை அகற்றாததின் காரணமாகவும் தண்ணீரை முழுமையாக சேமிக்க முடியாத நிலை இருந்து வருகிறது. இந்த குளத்தை முறையாக தூர்வாரி, அங்குள்ள கருவேல மரங்களை அகற்றினால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் கொடுக்க முடியும். முத்தையாபுரம், முள்ளக்காடு, அத்திமரப்பட்டி, காலாங்கரை, கோரம்பள்ளம் பகுதிகளில் உள்ள காலியான நிலப்பகுதிகளில் வளர்ந்துள்ள கருவேல மரங்கள் அகற்றப்படாமல் அப்படியே உள்ளது. இதனால் விவசாய நிலங்கள் மட்டுமல்லாது காற்றும் மாசுபடுகிறது. எனவே கருவேல மரங்களை அகற்றும் பணியை விரைந்து செயல்படுத்தினால் வறட்சியின் பிடியில் இருந்து தப்பிக்கலாம் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.