ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக தென்னரசு அறிவிப்பு: பாஜகவை கழற்றிவிட்ட எடப்பாடி பழனிசாமி?

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக தென்னரசு அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக எடப்பாடி அணி சார்பில் யாரை வேட்பாளராக இறக்குவது என்பது தொடர்பாக முடிவு எடுக்க முடியாமல் திணறி வந்தது. தொடக்கத்தில் முன்னாள் அமைச்சரும், மாநகர் மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று  கூறப்பட்டது. இதற்கு எடப்பாடியும் ஓகே தெரிவித்திருந்தார். ஆனால்  தொகுதியின் கள நிலவரம் அறிந்த ராமலிங்கம் மெல்ல ஜகா வாங்கிக்கொண்டார்.

இதன்பிறகு முன்னாள் எம்எல்ஏ தென்னரசு, முன்னாள் துணை மேயர் பழனிசாமி, மாவட்ட மாணவரணி இணை செயலாளர் நந்தகோபால் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெயர் அடிபட்டுக்கொண்டிருந்தது. இதனிடையே நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்; நாளை (01/02/2023) காலை தேர்தல் பணிமனைகள் திறக்கப்படும். அதற்கு பிறகு மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது என கூறியிருந்தார். இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவார் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக உள்ளார் தென்னரசு. ஈரோடு கிழக்கு தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். 2001-2006 மற்றும் 2016 முதல் 2021 வரை இருமுறை ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக பதவி வகித்தவர் தென்னரசு. இந்நிலையில் ஈரோட்டில் அதிமுக தேர்தல் பணிமணியை திறந்த உடன் வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி அணி அறிவித்தது. யாருக்கு ஆதரவு என்று தெரிவிக்காமல் பாஜக காலம் தாழ்த்தி வரும் நிலையில் பழனிசாமி அணி வேட்பாளரை அறிவித்தது. அதிமுக அணிகள் எங்களது முடிவுக்காக காத்திருப்பதில் தவறு இல்லை என பாஜக கூறியிருந்தது.

இடைத்தேர்தலில் பாஜக தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் முன்னரே எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்தார். இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்று தெரிவதற்கு முன்பே வேட்பாளரை பழனிசாமி அறிவித்தார். இரட்டை இலை சின்னம் பழனிசாமி அணிக்கு கிடைக்குமா என்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகே தெரிய வரும். இரட்டை இலை கிடைக்காவிட்டாலும் சுயேச்சை சின்னத்தில் நின்று பலத்தை நிரூபிக்க பழனிசாமி அணி தீவிரம் காட்டி வருகிறது.

Related Stories: