×

கோயம்பேடு காவல் நிலையத்திற்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நியமனம்

அண்ணாநகர்: தினகரன் செய்தி எதிரொலியால், கோயம்பேடு காவல் நிலையத்திற்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில், கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக இருந்தது. இதனால், நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விசாரிப்பதில் தொய்வு ஏற்பட்டது. மேலும், வழக்குகள் பதிவு செய்வதும் தாமதமானது. எனவே, காவல்நிலையத்திற்கு உடனடியாக குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டரை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதுதொடர்பாக நேற்று முன்தினம் தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதைதொடர்ந்து, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கோயம்பேடு காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டரை நியமிக்க உத்தரவிட்டார். அதன்பேரில், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் காமேஸ்வரி நேற்று கோயம்பேடு காவல் நிலையத்தில் பணியில் சேர்ந்தார். இதையடுத்து, நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தங்கள் கோரிக்கையை ஏற்று, ஒரே நாளில், குற்றப்பிரிவு ஆய்வாளரை நியமித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.


Tags : Coimbade Com Station , Appointment of Crime Branch Inspector in Koyambedu Police Station
× RELATED 2 நாள் அதிரடி வேட்டையில் போதை மாத்திரை,...