×

அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் நாடு முழுவதும் தேசிய கல்வி கொள்கை அமல்: ஒன்றிய பள்ளிக்கல்வித்துறை செயலர் சஞ்சய் குமார் பேட்டி

சென்னை: தேசிய கல்வி கொள்கையானது அடுத்த ஒன்றரை ஆண்டில், நாடு முழுவதும் முழுமையாக அமல்படுத்த உள்ளதாக ஒன்றிய பள்ளிக்கல்வித் துறை செயலர் சஞ்சய் குமார் தெரிவித்தார். ஜி20 உச்சி மாநாடு 2022-23ம் ஆண்டில் நடத்தும் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. ஜி20 உச்சி மாநாடு டில்லியில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதனையடுத்து நாடு  முழுவதும் 50 நகரங்களில் பல்வேறு துறைகளுடன் சேர்ந்து கருத்தரங்குகள்  நடந்து வருகிறது. அதன் ஒருபகுதியாக ஒன்றிய கல்வித்துறை சார்பிலான ஜி20  கல்விக்குழு மாநாடு சென்னை தரமணியில் உள்ள ஐஐடியின் ஆராய்ச்சி பூங்கா  வளாகத்தில் நேற்று தொடங்கியது.

இந்த தொடக்க விழாவில், ஒன்றிய  உயர்கல்வித்துறை செயலர் சஞ்சய் மூர்த்தி, ஒன்றிய உயர்கல்வித்துறை செயலர்  சஞ்சய் குமார், ஐஐடி இயக்குநர் காமகோடி, தமிழ்நாடு உயர் கல்வித்துறை  செயலாளர் கார்த்திகேயன், ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், மாணவர்கள்,  பேராசிரியர்கள் என 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சென்னையில் சர்வதேச  அளவில் கல்வி தொடர்பான கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெறுவது இதுவே  முதல்முறை. இந்த கண்காட்சியில் 50க்கும் அதிகமான அரங்குகள்  அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக,  தமிழ்நாட்டில் இருந்து மாநில கல்வித்துறையின் சார்பில் நான் முதல்வன், நம்ம பள்ளி  திட்டங்கள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ஆகியவற்றின் அரங்குகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.

ஒன்றிய அரசின் இந்திய ஸ்வையம், சமர்த்,  தீக்ஷா போன்ற திட்டங்கள் பற்றியும், மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி  உபகரணங்கள் தயாரிக்கும் ஸ்டார்ட் அப் இந்தியா நிறுவனங்கள் மற்றும் சவுதி  அரேபியா, பிரான்ஸ், சீனா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த  நிறுவனங்களும் இந்த கண்காட்சியில் அரங்குகள் அமைத்துள்ளன. ஜி20  கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள இந்த அரங்குகளை இன்றும், நாளையும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுத்துறை இயக்குநர் இன்னசென்ட் திவ்யா பேசுகையில், தமிழக  மாணவர்கள் இடையே ஆங்கில திறனை அதிகரிப்பதற்காக கேம்பிரிட்ஜ்  பல்கலைக்கழகத்துடன் இணைந்து தமிழக அரசு திட்டங்களை தீட்டி வருகிறது.

நான் முதல்வன்  திட்டம் மூலம் ஒரு வருடத்தில் 15 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு  பயிற்சி அளிக்கிறோம். முதல்  நாளிலிருந்தே மாணவர்களை தொழில் சார்ந்த திறனுடையவர்களாக  உருவாக்குகிறோம். பொறியியல் தொழிற்கல்வி மட்டுமல்லாது, கலை அறிவியல் உள்ளிட்ட  அனைத்து கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் இந்த வாய்ப்பை வழங்குகிறோம்.  மாணவர்களுக்கு பயிற்சியுடன் வேலைவாய்ப்பை தொழில் நிறுவனங்களில் வழங்குவதன்  மூலம், தொழில் நிறுவனங்களுக்கு தேவையான திறன் சார்ந்த மாணவர்களாக மாற்றுகிறோம் என்றார். ஜி20 கல்விக்குழு மாநாட்டின் கருத்தரங்கம் முடிந்தபின் ஒன்றிய கல்வித்துறை (உயர்கல்வி) செயலர்கள் கே.சஞ்சய் மூர்த்தி, சஞ்சய் குமார் (பள்ளிக்கல்வி) ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:

நமது தேசிய கல்வி கொள்கையால் மாணவர்களுக்கு பல தரப்பட்ட வாய்ப்புகள் கிடைக்கும். உலக நாடுகளுடன் போட்டி போடுவதற்கு இத்தகைய கொள்கைகள் அவசியம். அதேபோல், அனைத்து மாநில மொழிகளிலும் மாணவர்களுக்கு தொழில்நுட்பக் கல்வி வழங்கப்படும். தேசிய கல்விக் கொள்கையை அடுத்த ஒன்றரை ஆண்டில் முழுமையாக அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம். தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம் சிறப்பாக உள்ளது. இத்தகைய திட்டத்தை மற்ற மாநிலங்களிலும் செயல்படுத்த பரிந்துரை செய்யப்படும். சென்னையை தொடர்ந்து பூனே, அமிர்தசரஸ் போன்ற இடங்களில் கல்வி மாநாடு நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Union School Education ,Sanjay Kumar , Implementation of National Education Policy across the country in the next one and a half years: Union School Education Secretary Sanjay Kumar Interview
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்