ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய ஆதிதிராவிடர் கல்வி உதவித்தொகை பெற புதிய இணையதளம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவ - மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற, புதிய இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணாக்கருக்கு பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அதில், ஒன்றிய அரசால் நிதி பங்கீட்டுடன் செயல்படுத்தப்படும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டமும், மாநில அரசின் உயர்கல்வி சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டமும்  தலையாய திட்டங்களாகும்.

போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டங்கள் ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படுத்தப்படும் திட்டங்களாகும். இத்திட்ட வழிகாட்டு நெறிமுறைகளை ஆதிதிராவிடர் மாணாக்கர் https://scholarships.gov.in/public/schemeGuidelines/3064_G.pdf, பழங்குடியினர் மாணாக்கர், https://tribal.nic.in/writereaddata/Schemes/EDUPostMatricScholarship PMSforSTstudents230513.pdf மாணாக்கர் ஒன்றிய அரசின் இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 2022-2023ம் ஆண்டு முதல் இத்திட்டங்களை செயல்படுத்த புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் மற்றும் உயர்கல்வி சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் மாணாக்கர் விண்ணப்பிக்க 30.1.2023 அன்று கல்வி உதவித்தொகை இணையதளம் திறக்கப்பட்டு 28.02.2023 நாள் வரை சுமார் 10 லட்சம் மாணாக்கரின் விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணாக்கர் https://tnadtwscholarship.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆதார் எண், இணையவழியில் பெறப்பட்ட வருமான சான்று, சாதி சான்று உள்ளிட்ட பிற ஆவணங்களுடன் விண்ணப்பித்து போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் பயன் பெறலாம். முந்தைய ஆண்டுகளில் கல்வி உதவித்தொகை பெற்று, தற்போது புதுப்பித்தல் இனங்களின் கீழ் விண்ணப்பிக்கும் மாணாக்கரும் கட்டாயம் இந்த இணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: