×

அண்ணன் எனக்கூறி வாசுதேவன் என்பவர் மனு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களில் பங்கு கேட்டு வழக்கு: தீபா, தீபக் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஜெயலலிதாவின் சொத்துக்களில் தனக்கும் பங்கு வேண்டும் என்று கோரி ஜெயலலிதாவின் அண்ணன் என்று வாசுதேவன் என்பவர் தொடர்ந்த வழக்கில், பதில் அளிக்குமாறு தீபக், தீபாவிற்கு சென்னை உயர் நீதிமன்ற மாஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன் அமர்வு, கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் தீர்ப்பளித்தது. தீர்ப்பில், இந்து வாரிசுரிமைச் சட்டம் பிரிவு 15(2)(ஏ)ன்படி ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் மகள் தீபா ஆகியோர் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகள் என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து போயஸ் கார்டன் இல்ல சொத்துக்கள் தீபக், தீபாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மைசூர் வியாசரபுராவைச் சேர்ந்த 83 வயதான வாசுதேவன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தான் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சகோதரர் என்றும் ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமனின் முதல் மனைவியினுடைய மகன். தன் தந்தை ஜெயராமன் இரண்டாவது மனைவியாகத்தான் வேதவள்ளி என்கிற வேதம்மாவை திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர்கள் தான் ஜெயக்குமார் மற்றும் ஜெயலலிதா. ஜெயக்குமாரின் வாரிசுகள்தான் தீபா, தீபக். கடந்த 1950ம் ஆண்டு ஜெயராமனிடம் ஜீவனாம்சம் கேட்டு மைசூர் நீதிமன்றத்தில் தனது தாய் தாக்கல் செய்த வழக்கில் அப்போதே ஜெயக்குமார் மற்றும் ஜெயலலிதா பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டனர். இந்து வாரிசுரிமைச் சட்டப்படி தனக்கும் ஜெயலலலிதாவின் சொத்தில் பங்கு உள்ளது. காலதாமதமாக தாக்கல் செய்யப்படும் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு உயர் நீதிமன்ற நிர்வாக உத்தரவிற்காக மாஸ்டர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த மாஸ்டர் நீதிமன்றம் இந்த மனுவை பட்டியலிடுவது தொடர்பாக தீபா, தீபக் ஆகியோர் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையை வரும் 20ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

Tags : Vasudevan ,Chief Minister ,Jayalalithaa ,Deepa ,Deepak , Vasudevan, claiming to be his brother, claims share in former Chief Minister Jayalalithaa's assets: Court orders Deepa, Deepak to respond
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...