ஜி20 மாநாட்டு பிரதிநிதிகள் வருகை எதிரொலி மாமல்லபுரத்தில் சுற்றுலா வாகனங்கள் நுழைய போலீசார் தடை விதிப்பு

சென்னை: ஜி20 பிரதிநிதிகள் வருகையை முன்னிட்டும், அவர்களின் பாதுகாப்பு கருதியும் மாமல்லபுரத்தில் சுற்றுலா வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் புராதன சின்னங்களை யுனெஸ்கோ நிறுவனம் அங்கீகரித்துள்ளது. இந்த நிலையில், ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் பிரதிநிதிகள் 100க்கும் மேற்பட்டோர் (இன்று) மாமல்லபுரம் வருகின்றனர். அவர்கள், ஐந்து ரதம், அர்ஜுணன் தபசு, வெண்ணெய் உருண்டைபாறை, கடற்கரை கோயில் உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க உள்ளனர். எனவே, அவர்களின் பாதுகாப்புக்காக மாமல்லபுரத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். எனவே, வெளியூர் நபர்கள் கடும் சோதனைக்கு பிறகே மாமல்லபுரத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மாமல்லபுரம் வந்த சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை இசிஆர் நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டனர். சுற்றுலா வாகனங்கள் நேரடியாக மாமல்லபுரம் உள்ளே செல்ல போலீசார் தடை விதித்தனர். சுற்றுலா வேன், கார், பஸ்களை பூஞ்சேரி அரசு மருத்துவமனை அருகே நிறுத்திவிட்டு ஷேர் ஆட்டோ மூலம் நகருக்குள் செல்ல போலீசார் அறிவுறுத்தினர். ஆனால், உள்ளூர் வாகனங்களை மட்டும் போலீசார் நகருக்குள் அனுமதித்தனர்.

இதுகுறித்து, அமெரிக்க சுற்றுலாப்பயணிகள் கூறுகையில், மாமல்லபுரம் புராதன சின்னங்கள் மீது ஈர்ப்பு கொண்டு, நேற்றுமுன்தினம் விமானம் மூலம் சென்னை வந்தோம். பின்னர், நேற்று மதியம் கார் மூலம் சென்னையில் இருந்து மாமல்லபுரம் வந்த எங்களை இசிஆர் நுழைவு பகுதியில் தடுத்து நிறுத்தி, உள்ளே செல்ல அனுமதிக்காமல் 3 கி.மீ. தூரம் உள்ள பூஞ்சேரி அரசு மருத்துவமனை அருகே காரில் இருந்து இறக்கினர். பின்னர், ஷேர் ஆட்டோவில் செல்லுங்கள் என போலீசார் அறிவுறுத்தினர். இதனால், புராதன சின்னங்களை எளிதில் சுற்றிப்பார்க்க முடியாமல் சிரமம் அடைந்தோம் என்றனர்.

Related Stories: