×

மனுதாக்கல் துவங்கியது 233வது தேர்தலை சந்திக்கும் தேர்தல் மன்னன்: விதவிதமான கெட்அப்பில் சுயேச்சைகள் வேட்பு மனு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்.27ம் தேதி நடக்கிறது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கியது. காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை 9 பேர் சுயேச்சையாக வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். முதல் நாளான நேற்று சுயேச்சைகள் விதம் விதமான கெட்அப்பில் வந்து மனுதாக்கல் செய்தனர்.

*முதன் முதலாக தேர்தல் மன்னன் பத்மராஜன் (65) வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜனுக்கு இது 233வது தேர்தலாகும். இவர் பஞ்சர் கடை வைத்துள்ளார். கின்னஸ் சாதனை படைக்கும் நோக்கத்தில் தேர்தல்களில் போட்டியிட்டு வருவதாக அவர் கூறினார்.

* நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் யோகா பயிற்சியாளரும், காந்தியவாதியான ரமேஷ் (42) மகாத்மா காந்தி வேடமிட்டு, டெபாசிட் தொகை செலுத்த தராசுடன் ரூ.10 ஆயிரத்தை சில்லரை காசுகளாக எடுத்து வந்திருந்தார். இது அவருக்கு 10வது தேர்தல். கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் இவர் போட்டியிட்டுள்ளார். இவர் தனது விவரங்களை க்யூ.ஆர். கோட் மூலமாக அச்சிட்டு அனைவருக்கும் வழங்கியிருந்தார்.

* மதுரை, செல்லூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சங்கரபாண்டியன் (38), நீர்வளப் பாதுகாப்பு மற்றும் மக்கள் நல இயக்கம் எனும் அமைப்பின் நிறுவனர் ஆவார். டைல்ஸ் கான்ட்ராக்ட் தொழில் செய்து வரும் இவர், கையில் டம்மி ரூபாய்  நோட்டுகளுடனும், தூண்டிலுடனும் வித்தியாசமான தோற்றத்தில் மனுத்தாக்கல் செய்ய வந்திருந்தார். இது அவருக்கு 3வது தேர்தலாகும்.

* கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்த நூர் முகமது (63). இவர் செருப்பு மாலை அணிந்து வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்திருந்தார். அவருக்கு இது 41வது தேர்தல் ஆகும். மக்களுக்கு செருப்பாய் உழைப்பேன் என்பதை  உணர்த்தும் வகையில் செருப்பு மாலை அணிந்து வந்ததாக கூறிய அவர், பழைய கார்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார்.

* திருச்சி, உறையூரைச் சேர்ந்த ராஜேந்திரன் (61), அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் டெபாசிட் தொகைக்கான ரூ.10 ஆயிரத்தை 10 ரூபாய் காசுகளாக எடுத்து வந்திருந்தார்.  ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என அறிவித்துள்ளது. ஆனால், அரசு வங்கிகள் முதற்கொண்டு அந்த நாணயங்களை யாரும் வாங்குவதில்லை. அரசு அறிவிப்பும் நடைமுறையும் வேறு வேறாக உள்ளது. அதை சீர்படுத்த வேண்டும். மேலும், தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதியாக தனி பாடத் திட்டம் தொடங்க வேண்டும். தொழிற் கல்வி போல தேர்தலில் போட்டியிடுவதற்கும் அதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனும் நிலையை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே தான் தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்தார். ஜெயலலிதா போட்டியிட்ட ஆர்.கே. நகர், ஸ்ரீ ரங்கம் தொகுதிகளிலும் சுயேட்சையாக போட்டியிட்டதாக கூறினார்.

* திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை, அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த மனிதன் (55), பின்னோக்கி நடந்து வந்து ஒருவர் மனுதாக்கல் செய்தார். இவர் போட்டோ ஸ்டுடியோ வைத்துள்ளார்.  இவர், உலக அமைதியை வலியுறுத்தி கடந்த 1991 ஜூன் 14ம் தேதி முதல் பின்னோக்கி நடந்து வருகிறார். இதுவரை 32 ஆண்டுகள், பல லட்சம் கிலோ மீட்டர்கள் பின்னோக்கி நடந்துள்ளாராம். ஜனாதிபதி தேர்தலில் 7 முறையும், எம்பி, எம்எல்ஏ, கவுன்சிலர் தேர்தல் என இதுவரை 32 முறையும் என மொத்தம் 39 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளார். எப்போது ஜனாதிபதி ஆகிறேனோ அப்போது முதல் முன்னோக்கி நடப்பேன் என கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

* மதுரை, ஆண்டிப்பட்டியை சேர்ந்த மாரியப்பன் (53), மனைவி இளையராணி (45), பிஏ, பிஎட் படித்த மகள் சத்யா (24) என குடும்பம் சகிதமாக வந்து வேட்பு மனுத் தாக்கல் செய்தார். இவர்களில் 5 பேரின் மனுக்கள் சரியாக பூர்த்தி செய்யாததால் நிராகரிக்கப்பட்டன. பத்மராஜன், நூர்முகமது, ரமேஷ், தனலட்சுமி ஆகிய 4 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நாளை மறுநாள் (3ம் தேதி) வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். தேமுதிக வேட்பாளர் ஆனந்த் இன்று (1ம் தேதி) வேட்பு மனுதாக்கல் செய்கிறார். வருகிற 7ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். அதிமுக கூட்டணியில் யார் போட்டியிடுகிறார்கள் என்ற குழப்பம் நீடிப்பதால், வேட்பாளர் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Tags : Petitioning Begins Election King to Meet 233rd Election: Independents File Nominations in Different Getups
× RELATED சொல்லிட்டாங்க…