புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை ஏழ்மையிலும், ஏழ்மையானதாக இருக்கிறது: உச்ச நீதிமன்றம் வேதனை

புதுடெல்லி: புலம்பெயர் மற்றும் அங்கீகரிக்கப்படாத தொழிலாளர்கள் ஏழ்மையிலும் ஏழ்மையானவர்களாக இருக்கின்றனர் என கடும் வேதனை தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், குடும்ப அட்டை உட்பட அவர்களுக்கு தேவையானவற்றை ஒன்றிய அரசு, மாநில அரசுகள் செய்து தர வேண்டும் என தெரிவித்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான வழக்கு விவகாரத்தில் முன்னதாக உச்ச நீதிமன்றம் பல்வேறு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் அதுதொடர்பான வழக்கு நேற்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘இந்த வழக்கை பொறுத்தமட்டில் பெரும்பாலான மாநில அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகாமல் இருப்பது என்பது துரதிஷ்டவசமானது. குறிப்பாக மாநில அரசுகள் உரிய புள்ளி விவரங்களை கொடுத்தால் தானே அடுத்தக்கட்ட உத்தரவுகளை பிறப்பிக்க முடியும்.

குறிப்பாக புள்ளி விவரங்களின் படி புலம்பெயர் மற்றும் அங்கீகரிக்கப்படாத தொழிலாளர்கள் 28.55 கோடி பேர் இதுவரையில் இருக்கின்றனர் என ஒன்றிய அரசின் இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் எத்தனை பேர் குடும்ப அட்டை பெற்றுள்ளனர். அதே போன்று இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு என்று கொண்டு வரப்பட்ட திட்டங்களின் பலன்கள் அனைத்தும் அவர்களை சென்றடைந்ததா, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகளும் வழங்கப்படுகிறதா, உண்மையை கூற வேண்டுமானால் புலம்பெயர் மற்றும் அங்கீகரிக்கப்படாத தொழிலாளர்கள் நிலை ஏழ்மையிலும் ஏழ்மையானவர்கள் ஆவார்கள். அவர்களின் நிலை குறித்து உச்ச நீதிமன்றம் கவலை கொள்கிறது.

இதில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தேவையான குடும்ப அட்டை வழங்குவது மாநில அரசுகள் என்றாலும், அவை வழங்கப்படுகிறதா, ஆதார் அட்டை கிடைத்துள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமையாகும். மேலும் இதுபோன்ற தொழிலாளர்களின் புள்ளி விவரங்களை வெளியிட்டால் மட்டும் போதாது. அவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை அரசுகள் உறுதி செய்ய வேண்டும். அதனால் பதிவு செய்யப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத அனைத்து தொழிலாளர்களுக்கும் குடும்ப அட்டை மற்றும்  தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதா? என்ற புள்ளி விவரங்களை அனைத்து மாநில அரசுகளும் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், அடுத்த விசாரணையை பிப்ரவரி 20ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும் அன்றைய தினம் அனைத்து மாநில அரசு வழக்கறிஞர்களும் தவறாமல் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.

Related Stories: