பொதுத் தேர்தலுக்கு முந்தைய கடைசி முழு நிதிநிலை அறிக்கை ஒன்றிய பட்ஜெட் இன்று தாக்கல்: வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் வருமா?

புதுடெல்லி: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது 5வது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று காலை தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த அரசின் முழு பட்ஜெட்டாக இன்று காலை 11 மணிக்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இது, இவரது 5வது பட்ஜெட்டாகும். இதில், வரிச்சலுகை, தொழில் உற்பத்தியை ஊக்குவிக்க சலுகைகள் அறிவிக்கப்படும் என்று பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

ரியல் எஸ்டேட்: மலிவு விலை வீடுகளை வாங்குவதற்கு ஊக்குவிக்கும் வகையில், வீட்டுக்கடன் வட்டி மானிய திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும். மேலும், மலிவு விலை வீடு திட்டத்தில் பலன் பெறுவதற்கான வரம்புகளில் மேலும் சலுகைகள் அறிவிக்கப்பட வேண்டும் என, ரியல் எஸ்டேட் துறையினர் எதிர்பார்க்கின்றனர். வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்படுமா? என நடுத்தர மக்கள் எதிர்பார்த்துள்ளனர். கடைசியாக அருண்ஜெட்லி நிதியமைச்சராக இருந்தபோதுதான் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டது. அதன்பிறகு அறிவிப்பு வெளியாகவில்லை. பாஜ அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால், வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் கொண்டுவரப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது.

மேலும், வருமான வரி பிரிவு 80 சியின் கீழ் வரி விலக்கு வரம்பு ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும். இதுபோல் மருத்துவக் காப்பீடு மற்றும் செலவினங்களுக்கான வரம்பு ரூ.25,000 ஆக உள்ளதை மேலும் அதிகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். எலக்ட்ரிக் வாகனங்கள் விலை குறைய அவற்றுக்கான மானியம் வழங்கும் பேம் 2 திட்டத்தில் உரிய மாற்றம் செய்ய வேண்டும் என வாகன உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும், எலக்ட்ரிக் வாகன அனைத்து உதிரி பாகங்களுக்கும் ஒரே மாதிரியான வரி விதிப்பை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்ட பலன்களை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையினரும் பெறும் வகையில் உறுதிப்படுத்த வேண்டும் என வாகன உற்பத்தி துறையினர் தெரிவித்தனர். மானிய விலையில் விவசாயிகளுக்கு உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் தொடர்ந்து கிடைக்க வகை செய்யவும் திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

* ‘இந்திய பட்ஜெட்டை உலகமே எதிர்பார்க்கிறது’

நாடாளுமன்ற வளாகத்தில் பேட்டி அளித்த பிரதமர் மோடி, ‘‘இன்றைய ஜனாதிபதியின் உரை இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும், நாடாளுமன்ற முறைக்கும் பெருமை சேர்ப்பதாகும். பெண்களுக்கும், நாட்டின் பெரும் பழங்குடி பாரம்பரியத்திற்கு பெருமை சேர்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதோடு ஜனாதிபதி முர்வின் முதல் உரை முழு நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் தருணம். இதே போல நாளை (இன்று)  மற்றொரு பெண்மணியான நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டை இந்தியா மட்டுமின்றி உலகமே ஆவலுடன் எதிர்நோக்குகிறது. இந்த பட்ஜெட் நாட்டின் நம்பிக்கையையும், எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் வகையில் இருக்கும். உலகின் நம்பிக்கை கதிராக இன்னும் பிரகாசமாக பிரகாசிக்கும் என நம்புகிறேன்’’ என்றார்.

Related Stories: