×

கொரோனாவை இந்தியா கையாண்ட விதத்தை பார்த்து உலகமே பாராட்டியது: நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரை

டெல்லி: ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடக்கும் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் உரையாற்றி வருகிறார்.

நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரை கூறியதாவது:
2047-ம் ஆண்டிற்குள் நாம் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும், ஏழ்மையற்ற நாடாக இந்தியா திகழவேண்டும். 2047-ம் ஆண்டில் அடையவிருக்கும் லட்சியத்திற்கு ஏற்ற அடித்தளத்தை அமைக்க வேண்டும்.அனைவருக்குமான வளர்ச்சி என்ற விதத்தில் மத்திய அரசு நடைபோட்டு வருகிறது என குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கூறினார்.

9 ஆண்டுகளில் உலகின் பார்வையில் இந்தியாவின் நிலை என்பது பெருமளவில் மாறியுள்ளது. நாம் விரும்பிய நவீன கட்டமைப்பை நோக்கி நகர தொடங்கியுள்ளோம் என குடியரசு தலைவர் கூறினார். இந்தாண்டில் தன்னிறைவு பெற்ற நாடாக நாம் தொடர்ந்து வேகமாக முன்னேறி வருகிறோம். நாட்டின் இளைஞர்களும் பெண்களும் முன்னிலையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக திரவுபதி முர்மு கூறினார்.

பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மற்ற நாடுகள் தங்கள் பிரச்சனையை தீர்க்க இந்தியாவின் உதவியை எதிர்பார்க்கின்றன. இந்தியா தனது பிரச்சனைகளை தீர்க்க பிற நாடுகளை சார்ந்திருக்காது என குடியரசு தலைவர் தனது உரையில் கூறினார்.

ஏழைகளுக்காகவும், சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் மத்திய அரசு தீவிரமாக பணியாற்றுகிறது. வறுமை உள்ளதாக, நடுத்தர வர்க்கம் செழிப்பான, இளைஞர்கள் முன்னிலையில் நிற்கும் இந்தியாவாக இருக்க வேண்டும். நிலையான, அச்சமற்ற, தீர்க்கமான அரசு பெரிய கனவுகளை நினைவாக்கும் நோக்கில் செயல்படுகிறது என ஜனாதிபதி கூறினார்.

சட்டப்பிரிவு 370 நீக்கம், முத்தலாக் தடை சட்டம் உள்ளிட்ட விஷயங்களில் அரசு தீர்க்கமாக முடிவு எடுக்கிறது. கர்சீப் கல்யாண் யோஜனா திட்டம் மூலம் கோடிக்கணக்கான ஏழை மக்கள் தடையற்ற உணவை பெறுகின்றனர் என திரவுபதி முர்மு கூறியுள்ளார்.

 துல்லிய தாக்குதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாத நடவடிக்கைக்கு பதிலடி தரப்பட்டுள்ளது. ஊழலை ஒழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. முறைகேடு என்பது நாட்டிற்கு அச்சுறுத்தல் என்பதால் முறைகேடு இல்லாத இலக்கை நோக்கி அரசு பயணித்து வருவதாக திரவுபதி முர்மு கூறினார்.

கொரோனாவை இந்தியா கையாண்ட விதத்தை பார்த்து உலகமே பாராட்டியது. 200 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. பழங்குடியினருக்காக முன்னெப்போதும் இல்லாதா முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது என குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கூறினார்.

ஜம்மு-காஷ்மீரில் மிகவும் அச்சுறுத்தலாக விளங்கிய பயங்கரவாத பிரச்சனைக்கு முடிவு காணப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு சுற்றுலா மேம்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.

பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ திட்டத்தின் வெற்றியை நாம் அனுபவித்து வருகிறோம். பணிகளில் பெண்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் இருக்க கூடாது என்பதை உறுதி மத்திய அரசு உறுதி செய்தது. நமது மகள், சகோதரிகள் உலக அளவில் பரிசு பெறுவது பெருமைக்குரியது. நமது பாரம்பரியம் ஆகாயத்தை தொடுவதற்கான தைரியத்தை வழங்குகிறது என திரவுபதி முர்மு கூறியுள்ளார்.

நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் பெயர்கள் 21 அந்தமான் தீவுகளுக்கு வைக்கப்பட்டது. சுய சார்பு திட்டம் நாட்டு மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. அனைத்து விதமான அடிமைத்தனங்களை முற்றிலும் ஒழிக்க முயற்சி எடுக்கப்படுவதாக குடியரசு தலைவர் கூறினார்.

இந்தியாவின் உற்பத்தி திறன் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் உள்ள உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவை படையெடுத்து வருகின்றன. அரசு புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதில் 81-வது இடத்தில் இருந்து 40-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. விளையாட்டு துறையில் திறமையானவர்களை ஊக்குவிக்க கேலோ இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக முர்மு தெரிவித்தார்.

அதிகமான மருத்துவக்கல்லூரிகளால் மருத்துவ படிப்புக்கான இடங்கள் உயர்ந்துள்ளது. கிராம மக்களுக்கு வேலை, மருத்துவ வசதி கிடைத்திருப்பதாக உலக வங்கி அமைப்பு தெரிவித்துள்ளதாக முர்மு கூறினார்.

விமான படை அதிவேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. நாட்டின் மிகப்பெரிய ரயில் நிலையங்கள் நவீனத்துவம் பெறுகின்றன. ரயில்களை மின்சார ரயிலாக மாற்றுவதில் அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. வளர்ச்சி, இயற்க்கை பாதுகாப்பு இரண்டும் தோளோடு தோள் சேர்ந்து ஒன்றாக உள்ளது. ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்தும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.

நாட்டின் முக்கிய நகரங்களில் மின்சார பேருந்துகள் இயக்கப்படுகிறது. கடந்த 8 ஆண்டுகளில் நாட்டின் மெட்ரோ கட்டமைப்பு 3 மடங்கு அதிகரித்துள்ளது. நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பணியாற்றி வரும் வேகம் அசாதாரணமானது என ஜனாதிபதி கூறியுள்ளார்.

உலக அளவில் நலப்பணிகளை செய்வதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது. இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகள் உற்று நோக்குகின்றன. கடந்த 8 ஆண்டுகளில் புதிதாக 300 பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜநாயகத்தின் மையமான நாடாளுமன்றத்தில் நமது செயல்பாடுகள் சிறப்பாக இருக்க வேண்டும். இலட்சியத்தை அடைய நான் ஒன்றோடு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தனது உரையில் கூறினார்.


Tags : India ,Corona ,President ,Parliament , Parliamentary Session, President Dravupati Murmu, Parliament
× RELATED இந்தியாவின் எதிர்காலத்தை...