இனிவரும் காலங்களில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாமன்ற கூட்டம்: மேயர் பிரியா அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டங்கள் இனி வரும் காலங்களில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்படும், என மேயர் பிரியா அறிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம், ரிப்பன் மாளிகையில் உள்ள கூட்டரங்கில் மேயர் பிரியா தலைமையில் நேற்று நடைபெற்றது. துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும், சென்னையில் பருவமழை காலத்தில் சிறப்பாக செயல்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை பாராட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சான்றிதழ் வழங்க உள்ளதாக மேயர் பிரியா அறிவித்தார்.

முன்னதாக, இந்திய சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளை நினைவுகூறும் வகையில் அவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனையடுத்து, கேள்வி நேரம் தொடங்கியது. இதில் மாமன்ற உறுப்பினர்கள் வார்டுகளில் உள்ள பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு மேயர் பிரியா பதிலளித்தார். இதை தொடர்ந்து, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கவுன்சிலர்களின் விவாதம் வருமாறு: ஜீவன் (மதிமுக): கடந்த ஜனவரி 9ம் தேதி தமிழ்நாடு என்ற பெயரை கவர்னர் பேரவையில் பேச மறுத்தது கண்டனத்திருக்குரியது.

அண்ணா, அம்பேத்கர், பெரியார் உள்ளிட்டோரின் பெயரை சொன்னால் நாக்கு தீட்டு பட்டுவிடும் என்பதை எண்ணி சொல்லாமல் இருந்திருக்கிறார். சென்னை மாநகராட்சி சார்பில் கவர்னருக்கு எதிரான கண்டன தீர்மானத்தை மேயர் கொண்டு வர வேண்டும். மேலும் மாமன்ற கூட்டத்தை தொடங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்க வேண்டும். மேயர் பிரியா: அடுத்த மாதத்தில் இருந்தே தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பின்னரே மாமன்ற கூட்டம் தொடங்கும். தனியரசு (திமுக):  திருவொற்றியூர் பகுதியில் கட்டுமரத்தில் சென்று மீன்பிடித்து வந்து வீடுவீடாக மீன்களை விற்பனை செய்யும் நிலை நீடித்து வருகிறது. அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட ரூ.100 கோடியில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை தனது மண்டலத்தில் அமல்படுத்த வேண்டும்.

மேயர் பிரியா: நகர்ப்புற ஏழைகளின் மேம்பாட்டிற்காக தமிழ்நாட்டில் பல நகரங்களில் ரூ.100 கோடியில் நகரப்புற வேலை வாய்ப்பு திட்டம் அமல்படுத்தப்படுகிறது. அதன்படி, சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை மண்டலங்கள் 4 மற்றும் 6ல் இத்திட்டம் முன்மாதியாக செயல்படுத்தப்படுகிறது. இந்த இரண்டு மண்டலங்களிலும், தலா ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. அந்தவகையில் தமிழக அரசு இத்திட்டத்தை விரிவுப்படுத்தும் போது திருவொற்றியூர் பகுதியிலும் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த பரீசிலிக்கப்படும்.

சரஸ்வதி (சிபிஎம்):  ஆயிரம் விளக்கு பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்து இளம்பெண் உயிரிழந்தது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை விளக்க வேண்டும்.

மேயர் பிரியா: கட்டிடம் இடிக்கும் பணியின் போது இளம்பெண் உயிரிழந்தது வருத்தத்திற்கு உரியது. அது தனியாருக்கு சொந்தமான இடம். மேலும் மாநகராட்சியின் விதிமுறைகளை பின்பற்றாமல் கட்டிடம் இடிக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மேலும் இனிவரும் காலங்களில் தனியார் இடமாக இருந்தாலும் கட்டிடம் இடிக்கும் போது அந்த பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வார்கள். இவ்வாறு மாமன்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

* வடமாநிலத்தவர் வருகையை ஆய்வு செய்ய வேண்டும்

திமுக மாமன்ற உறுப்பினர் சொக்கலிங்கம் கூறுகையில், ‘‘வடசென்னைக்கு  வரும்  ஒரு ரயிலில் 5000 பேர் பயணம் மேற்கொள்ளலாம். ஆனால்  15,000 பேர் பயணம் மேற்கொள்ளும் சூழல் நிலவுகிறது. இதற்கு காரணம்  அதிகப்படியான வடமாநிலத்தவர்களின் வருகை தான். மேலும், வடமாநிலத்தவர்களின் எண்ணிக்கையையும், அவர்கள் இங்கு வந்து  என்ன செய்கிறார்கள் என்பதையும் மாநகராட்சி தரப்பில் ஆய்வு மேற்கொள்ள  வேண்டும்,’’ என்றார்.

* கவுன்சிலர்களுக்கு ஊதியம்

24வது வார்டு உறுப்பினர் சேட்டு (அதிமுக) பேசுகையில், ‘‘மக்களின் நேரடி குறைகளை சரி செய்யும் பணியில் ஈடுபடும் கவுன்சிலர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் போல ஊதியம் வழங்க வேண்டும். ஆனால் கூலியாக 800 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது,’’ என்றார். அப்போது துணை மேயர் மகேஷ்குமார் கூறுகையில், ‘‘கவுன்சிலர்களுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது,’’ என்றார் இதைத்தொடர்ந்து மேயர் பிரியா கூறுகையில், ‘‘அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் நல்ல செய்தி வரும்,’’ என்றார்.

Related Stories: