திருவொற்றியூர் பகுதியில் ரூ.8 லட்சத்தில் சிறுவர் பூங்கா: எம்பி திறந்து வைத்தார்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் குளம் அருகில், வடக்கு மாட வீதியில் உள்ள சிறுவர் பூங்கா பழுதடைந்து, பயன்படுத்த முடியாமல் இருந்தது. இந்த பூங்காவை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள்  திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன்படி, சென்னை மாநகராட்சி நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில், சிறுவர்களுக்கான சுழல் நாற்காலி, ஊஞ்சல் போன்ற விளையாட்டு சாதனங்களுடன் சிறுவர் பூங்காவை சீரமைக்கப்பட்டது.

இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு தலைமை வகித்தார். கலாநிதி வீராசாமி எம்பி பூங்காவை திறந்து வைத்து, மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட அவை தலைவர் குறிஞ்சி கணேசன், திமுக நிர்வாகிகள் ஆர்.சி.ஆசைத்தம்பி, ஆர்.எஸ்.சம்பத், முன்னாள் கவுன்சிலர் சாந்தி, தமிழ்ச்செல்வன், கார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: