×

பல்வேறு நாட்டு பிரதிநிதிகள் பங்கேற்கும் ஜி20 கருத்தரங்கம் இன்று தொடக்கம்: சென்னை ஐஐடியில் 3 நாள் நடக்கிறது

சென்னை: ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அடுத்த ஆண்டு டெல்லியில் ஜி20 நாடுகளின் மாநாட்டை இந்தியா நடத்த உள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் 200 இடங்களில் பல்வேறு தலைப்புகளில் ஜி20 நாடுகள் தொடர்பான கருத்தரங்குகள், கண்காட்சிகள் நடத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி, நாடு முழுவதும் நேற்று முதல் ஜி20 மாநாடுகள், கருத்தரங்குகள் தொடங்கி உள்ளன. இதற்காக ஜி20 உறுப்பு நாடுகள் மற்றும் நட்பு நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் இந்தியா வந்துள்ளனர். இவர்களில் 75 பேர் புதுச்சேரியில் நேற்று நடந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டில் சென்னை, தஞ்சை உள்பட சில இடங்களில் ஜி20 மாநாடு கருத்தரங்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை வரும் ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களை சுற்றி பார்ப்பதற்கும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜி20 நாடுகளின் கல்வி தொடர்பான கருத்தரங்குகளை சென்னை, அமிர்தசரஸ், புவனேஷ்வர் மற்றும் புனேயில் உள்ள முன்னணி கல்வி கழகங்களில் நடத்த ஒன்றியஅரசு ஏற்பாடு செய்து உள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள ரிசார்ச் மைய கட்டிடத்தில் 3, 6, 7 ஆகிய தளங்களில் கல்வி கருத்தரங்கும், கண்காட்சியும் நடைபெற உள்ளது. இதையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். வெளியில் இருந்து அரங்கிற்கு வரும் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டு தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.

சென்னையில் பல்வேறு நாட்டு பிரதிநிதிகள் பங்கேற்கும் கல்வி தொடர்பான கருத்தரங்கு, கண்காட்சி நடப்பது இதுவே முதன்முறையாகும். சென்னையில் கல்விக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் ஐ.ஐ.டி. வளாகத்தில் கண்காட்சி வளாகம் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை ஐ.ஐ.டி.யில் நடக்கும் கருத்தரங்கு மற்றும் கண்காட்சிக்கு, “கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு” என்று தலைப்பு வழங்கப்பட்டு உள்ளது. எனவே, டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு தொடர்பாக இன்று நடக்கும் ஜி20 அமைப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் விவாதிக்கப்படும். மொத்தம் 3 அமர்வுகளாக இந்த கருத்தரங்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதில் உயர் கல்வியில் உள்ள உயர்தரமான படிப்புகள் தொடர்பாக ஆய்வுகள் செய்யப்படும். ஆற்றலை வெளிப்படுத்தும் தொழில்நுட்பத்துக்கும் முக்கியத்துவம் வழங்கப்படும். இதில் எடுக்கப்படும் முடிவுகள் ஜி20 மாநாட்டில் வைக்கப்படும். இதன் காரணமாக, சென்னை ஐ.ஐ.டி.யில் நடக்கும் இந்த கல்வி கருத்தரங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கருத்தரங்கில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 200 மாணவர்கள் பங்கேற்கிறார்கள். சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் 100 பேருக்கும் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. மொத்தத்தில் 900 பேர் கருத்தரங்கு, கண்காட்சியில் கலந்துகொள்கிறார்கள். ஜி20 கண்காட்சிக்காக அமைக்கப்படும் அரங்குகளை பிப்ரவரி 1 மற்றும் 2ம் தேதிகளில் மாணவர்கள், பொதுமக்கள் பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* சென்னையில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை: போலீஸ் எச்சரிக்கை
கிண்டியில் உள்ள சென்னை ஐஐடி வளாகத்தில் ஜி20 கல்வி செயற்குழு மாநாடு இன்று தொடங்குகிறது. இந்த மாநாட்டில் 29 வெளிநாடுகளை சேர்ந்த கல்வி அறிஞர்கள் மற்றும் 15 பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். இதனால் சென்னை ஐஐடி முழுவதும் மாநகர காவல்துறை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக, மாநாட்டில் கலந்துகொள்ள 29 வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்துள்ள கல்வியாளர்கள் தாஜ் கோரமண்டல், தாஜ் கன்னிமாரா, ஹயாத், தாஜ் கிளப் ஹவுஸ் ஆகிய இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

எனவே, பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று முதல் மாநாடு முடியும் 2ம் தேதி வரை சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட வெளிநாட்டு கல்வியாளர்கள் தங்கியுள்ள பகுதிகள், மாநாடு நடைபெறும் பகுதிகள், முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்யும் வழித்தடங்கள் அனைத்தும் ‘சிவப்பு மண்டலமாக’ மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து, இந்த பகுதிகளில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை மீறி யாரேனும் டிரோன் மற்றும் வான் வழி வாகனங்கள் பறக்கவிட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்படுவார்கள் என்று மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags : G20 Summit ,IIT ,Chennai , The G20 Summit, which will be attended by representatives of various countries, begins today: It will be held for 3 days at IIT, Chennai
× RELATED நீரியல் நிபுணர் இரா.க.சிவனப்பன் காலமானார்..!!