வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று காலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்கக் கடலில் இலங்கை-திரிகோண மலைக்கும் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் 670 கிமீ தொலைவிலும், காரைக்காலில் இருந்து கிழக்கு- தென் கிழக்கே சுமார் 880 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து இன்று மாலை வரை மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து பிப்ரவரி 1ம் தேதி காலையில் இலங்கையை கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், உள் தமிழ்நாடு மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் மழை பெய்யும். அதன் தொடர்ச்சியாக, பிப்ரவரி 1ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களிலும் காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். இதே நிலை 3ம் தேதி வரை நீடிக்கும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய  குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று  மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

Related Stories: